லூக்கா 4:1-20
லூக்கா 4:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார். அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை; அந்த நாட்கள் முடிந்தவுடன் அவர் பசியாயிருந்தார். சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் பிழைப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார். சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான். பிறகு சாத்தான் அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும் மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன்; ஏனெனில் அது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நான் விரும்பினால் அதை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும். நீர் என்னை வணங்கினால், இவையெல்லாம் உம்முடையவையாகும்” என்றான். அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ என்று எழுதியிருக்கிறதே” என்று பதிலளித்தார். பின்பு சாத்தான், அவரை எருசலேமுக்குக் கொண்டுசென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி சொன்னதாவது, “நீர் இறைவனுடைய மகனானால் இங்கிருந்து கீழே குதியும். ஏனெனில், “ ‘உம்மைக் காக்கும்படிக்கு, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்; உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறதே.’ ” அதற்கு இயேசு, “ ‘உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார். இவ்விதமாக சாத்தான் சோதனைகள் எல்லாவற்றையும் முடித்தபின்பு, ஏற்ற காலம் வரும்வரை இயேசுவைவிட்டுப் போய்விட்டான். இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது. இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி அவர் ஜெப ஆலயத்திற்குப்போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார். அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் விரித்து, இவ்வாறு எழுதியிருந்த இடத்தைக் கண்டு வாசித்தார்: “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் பண்ணினார். அவர் என்னை சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை அறிவிக்கவும், குருடருக்கு பார்வையை அளிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.” பின்பு இயேசு அந்தப் புத்தகச்சுருளைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.
லூக்கா 4:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இயேசு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவராக யோர்தானைவிட்டுத் திரும்பி, பரிசுத்த ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது. அப்பொழுது சாத்தான் அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கல் அப்பமாக மாறும்படிச் சொல்லும் என்றான். இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பின்பு சாத்தான் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலும் உமக்கு அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் என்னுடைய பொறுப்பில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுப்பேன். நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய யெகோவாவைமட்டும் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்குமட்டும் ஆராதனைசெய் என்று எழுதியிருக்கிறது என்றார். அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனென்றால், இங்கேயிருந்து கீழே குதியும். ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மை தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதிருப்பாயாக என்றும் சொல்லியிருக்கிறதே என்றார். சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான். பின்பு இயேசு பரிசுத்த ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார். அவரைப்பற்றிய செய்தி சுற்றிலும் இருக்கிற தேசங்களெல்லாம் பரவியது. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார். ஒரு நாள் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று, வேதத்தை வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புத்தகத்தை விரித்தபோது: யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், இந்த வருடம் யெகோவாவுடைய கிருபையின் வருடம் என்பதைச் சொல்லவும், என்னை அனுப்பினார்,” என்று எழுதியிருக்கிறதை அவர் பார்த்து. அதை வாசித்து, பின்பு புத்தகத்தைச் சுருட்டி, பணிவிடை செய்பவனிடம் கொடுத்து உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லோரும் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
லூக்கா 4:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார். அங்கு பிசாசு இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். அந்நாட்களில் இயேசு எதையும் உண்ணவில்லை. சோதனைக் காலமான அந்த நாட்கள் கழிந்த பின்னர், இயேசுவுக்கு மிகுந்த பசி உண்டாயிற்று. பிசாசு இயேசுவை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனானால், இந்தக் கல்லுகளை அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான். அதற்கு இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “‘மக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல,’” என்றார். அப்போது பிசாசு அவரை உயரமான ஓர் இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் ஒரு நொடிக்குள் உலகின் எல்லா இராஜ்யங்களையும் காண்பித்தான். பிசாசு இயேசுவை நோக்கி, “உனக்கு இந்த எல்லா இராஜ்யங்களையும், அதிகாரங்களையும், அவற்றின் மகிமையையும் கொடுப்பேன். அவை எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் கொடுக்க விரும்புகிறவனுக்கு அவற்றைக் கொடுக்கமுடியும். நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்” என்று கூறினான். பதிலாக இயேசு, “வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “‘உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டும் வழிபடுங்கள்; அவருக்கு மட்டுமே சேவை செய்யுங்கள்.’” என்றார். பின் பிசாசு இயேசுவை எருசலேமுக்கு அழைத்துச் சென்றான். தேவாலயத்தின் உயர்ந்த இடத்தில் இயேசுவை நிற்க வைத்தான். அவன் இயேசுவிடம், “நீர் தேவனுடைய குமாரனானால் கீழே குதியும், “‘தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார். உமது பாதங்கள் பாறையில் இடித்துவிடாதபடிக்கு அவர்கள் தம் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது” என்றான். அவனுக்கு இயேசு, “‘உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்காதே’ என்றும் கூட வேதவாக்கியங்கள் சொல்கிறதே” என்று பதில் சொன்னார். பிசாசு இயேசுவை எல்லா வகையிலும் சோதித்து முடித்தான். இன்னும் தகுந்த காலம் வரும் வரைக்கும் காத்திருக்க முடிவு செய்து அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். இயேசுவைப் பற்றிய செய்திகள் கலிலேயா தேசத்தைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் பரவின. இயேசு யூதர்களின் ஜெப ஆலயங்களில் போதிக்க ஆரம்பித்தார். எல்லா மக்களும் அவரைப் புகழ்ந்தனர். தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இயேசு புத்தகத்தைத் திறந்து கீழ்வரும் பகுதி எழுதப்பட்டிருப்பதைக் கண்டார்: “தேவனுடைய ஆவி என்னிலுள்ளது. ஏதுமற்ற மக்களுக்கு நற்செய்தியைப் போதிப்பதற்கு தேவன் என்னைத் தேர்ந்தார். கைதிகள் விடுதலை பெறவும் குருடர்கள் மீண்டும் பார்வை பெறவும் அம்மக்களுக்குப் போதிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார். தங்கள் துன்பத்தினின்று பலவீனர்கள் விடுதலை பெறும்பொருட்டு தேவன் என்னை அனுப்பினார். மக்களுக்கு தேவன் இரக்கம் காட்டும் காலத்தை அறிவிக்கும்படியாக தேவன் என்னை அனுப்பினார்” என்பதை இயேசு வாசித்துவிட்டு புத்தகத்தை மூடினார். அவர் புத்தகத்தை திருப்பித் தந்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த ஒவ்வொருவரும் இயேசுவைக் கூர்ந்து நோக்கினர்.
லூக்கா 4:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.