எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:16-24

எபேசியருக்கு எழுதிய கடிதம் 6:16-24 TAERV

நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நான் நேசிக்கிற நம் சகோதரன் தீகிக்குவை உங்களிடம் அனுப்புவேன். கர்த்தரின் பணியில் அவன் நம்பிக்கைக்குரிய தொண்டன். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அப்பொழுது உங்களுக்கு என் நிலை என்னவென்றும், நான் செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெரியும். அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன். பிதாவாகிய தேவனிடமிருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு நம்பிக்கையோடு கூடிய சமாதானமும் அன்பும் கிடைப்பதாக. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.