எபேசியர் 6:16-24

எபேசியர் 6:16-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும். இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள். எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள். அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள். நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு என்னைப்பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். அப்பொழுது நான் எப்படியிருக்கிறேன் என்றும், என்ன செய்கிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். பிதாவாகிய இறைவனிடமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமும் இருந்து, எல்லாச் சகோதரருக்கும் சமாதானமும், விசுவாசத்துடன் இணைந்த அன்பும் இருப்பதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.

எபேசியர் 6:16-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும், நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

எபேசியர் 6:16-24 பரிசுத்த பைபிள் (TAERV)

நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். நான் நேசிக்கிற நம் சகோதரன் தீகிக்குவை உங்களிடம் அனுப்புவேன். கர்த்தரின் பணியில் அவன் நம்பிக்கைக்குரிய தொண்டன். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அப்பொழுது உங்களுக்கு என் நிலை என்னவென்றும், நான் செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெரியும். அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன். பிதாவாகிய தேவனிடமிருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு நம்பிக்கையோடு கூடிய சமாதானமும் அன்பும் கிடைப்பதாக. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.

எபேசியர் 6:16-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

எபேசியர் 6:16-24

எபேசியர் 6:16-24 TAOVBSIஎபேசியர் 6:16-24 TAOVBSIஎபேசியர் 6:16-24 TAOVBSI