அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-47

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-47 TAERV

பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான். வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-47