அப்போஸ்தலர் 2:38-47

அப்போஸ்தலர் 2:38-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான். பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான். பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அப்போஸ்தலர் 2:38-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

அப்போஸ்தலர் 2:38-47 பரிசுத்த பைபிள் (TAERV)

பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான். வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

அப்போஸ்தலர் 2:38-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

அப்போஸ்தலர் 2:38-47

அப்போஸ்தலர் 2:38-47 TAOVBSI