சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 4

4
சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்
1எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் குமாரனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். 2சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் குமாரர்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். 3ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)
4சவுலின் குமாரனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.
5பேரோத்திலுள்ள ரிம்மோனின் குமாரர்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். 8அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.
ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது ராஜாவை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் குமாரன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.
9ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.
12எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்