சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 3

3
இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்
1சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.
தாவீதுக்கு ஆறு குமாரர்கள் எப்ரோனில் பிறந்தனர்
2எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
முதல் குமாரன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.
3இரண்டாவது குமாரன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.
மூன்றாவது குமாரன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் என்பவள் ஆவாள்.
4நான்காம் குமாரன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.
ஐந்தாம் குமாரன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
5ஆறாம் குமாரன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய். தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு குமாரர்களும் பிறந்தனர்.
தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்
6தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். 7சவுலிடம் ஆயாவின் குமாரத்தியான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
8இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் ராஜாவாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும்#3:9-10 தாண், பெயெர்செபா இஸ்ரவேலின் வடக்கும் தெற்கும் சேர்ந்த முழு நாடு என்று இதற்கு அர்த்தம். தாண் இஸ்ரவேலின் வடக்கு பகுதியில் இருந்த நகரம் மற்றும் பெயெர்செபா யூதாவின் தெற்கு பகுதியில் இருந்தது. அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.
12அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு ராஜாவாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.
13தாவீது, “நல்லது! நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வேன். ஆனால் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்: சவுலின் குமாரத்தி மீகாளை என்னிடம் அழைத்துவரும்வரை உன்னை நான் சந்திக்கமாட்டேன்” என்றான்.
14தாவீது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்திடம் செய்தியோடு தூதுவரை அனுப்பினான். தாவீது, “என்னுடைய மனைவியாகிய மீகாளைக் கொடு. அவளை எனக்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. நான் அவளுக்காக நூறு பெலிஸ்தியரைக் கொன்றேன்” என்றான்.
15இஸ்போசேத் லாயிசின் குமாரனாகிய பல்த்தியேலிடமிருந்து மீகாளை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். 16மீகாளைப் பின் தொடர்ந்து அவள் கணவன் பல்த்தியேலும் சென்றான். மீகாளோடு பகூரீமுக்கு வந்தபோது பல்த்தியேல் அழுதுக்கொண்டே பின்தொடர்ந்தான். ஆனால் அப்னேர் பல்த்தியேலை நோக்கி, “வீட்டிற்குப் போ” என்றான். எனவே பல்த்தியேல் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.
17இஸ்ரவேலின் தலைவர்களுக்கு அப்னேர் செய்தி சொல்லியனுப்பினான். அவன், “நீங்கள் தாவீதை ராஜாவாக ஆக்கக் காத்திருக்கிறீர்கள். 18இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.
19எப்ரோனிலிருந்த தாவீதுக்கு அப்னேர் சொன்ன இக்காரியங்களை பென்யமீன் கோத்திரத்திற்கும் சொன்னான். பென்யமீன் கோத்திரத்திற்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அப்னேர் கூறிய காரியங்கள் நன்மையாகத் தோன்றின.
20பின்பு எப்ரோனிலிருந்த தாவீதிடம் அப்னேர் வந்தான். அவன் தன்னோடு 20 பேரை அழைத்து வந்திருந்தான். அப்னேருக்கும் அவனோடு வந்த ஆட்களுக்கும் தாவீது விருந்தளித்தான்.
21அப்னேர் தாவீதை நோக்கி, “எனது ஆண்டவனும், ராஜாவுமானவரே! நான் அனைத்து இஸ்ரவேலரையும் உம்மிடம் அழைத்துவர அனுமதியும். அப்போது அவர்கள் உம்மோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். பின் நீர் விரும்பியதுபோல் இஸ்ரவேலை ஆளலாம்” என்றான்.
எனவே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான். அப்னேர் சமாதானமாய் திரும்பினான்.
அப்னேரின் மரணம்
22யோவாபும் தாவீதின் அதிகாரிகளும் யுத்தத்திலிருந்து திரும்பினார்கள். பகைவரிடமிருந்து எடுத்த பல பொருட்கள் அவர்களிடமிருந்தன. அப்போதுதான் அப்னேர் தாவீதிடமிருந்து சமாதானமாய் புறப்பட்டுச் சென்றிருந்தான். ஆதலால் அந்நேரம் எப்ரோனில் தாவீதோடு அப்னேர் இருக்கவில்லை 23யோவாபும் அவனது படையும் எப்ரோனை அடைந்தது. படையினர் யோவாபிடம், “நேரின் குமாரனாகிய அப்னேர் தாவீது ராஜாவிடம் வந்திருந்தான். அவன் சமாதானமாய் செல்லுமாறு தாவீது அனுமதித்தான்” என்றனர்.
24யோவாப் ராஜாவிடம் வந்து, “நீங்கள் என்ன செய்தீர்கள்? அப்னேர் உங்களிடம் வந்தும், அவனுக்கு எந்தத் துன்பமும் செய்யாமல் அவனை அனுப்பியுள்ளீர்கள்! 25நேரின் குமாரனாகிய அப்னேரை உமக்குத் தெரியும். அவன் உம்மை வஞ்சிக்க வந்தான். நீர் செய்துக்கொண்டிருக்கும் காரியங்களைக் குறித்து வேவு பார்க்க அவன் வந்தான்” என்றான்.
26யோவாப் தாவீதை விட்டுச்சென்று சீராவின் கிணற்றருகே இருந்த அப்னேரைச் சந்திக்கும்படி தூதுவர்களை முன்னே அனுப்பினான். அவர்கள் அப்னேரை தனியே அழைத்து வந்தனர். அது தாவீதுக்குத் தெரிந்திருக்கவில்லை. 27அப்னேர் எப்ரோனை அடைந்ததும், அவனோடு தனித்துப் பேசும்படியாக யோவாப் வாசலின் பின்புறம் அழைத்துச் சென்றான். அப்போது யோவாப் அப்னேரை வயிற்றில் குத்தினான். அப்னேர் மரித்தான். யோவாபின் சகோதரனான ஆசகேலை அப்னேர் கொன்றிருந்தான். ஆகையால் இப்போது யோவாப் அப்னேரைக் கொன்றான்.
அப்னேருக்காக தாவீதின் அழுகை
28தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் குமாரனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்கமற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார். 29யோவாபின் குடும்பத்தார் குற்றவாளிகள். அவர்களுக்கும் பல தொல்லைகள் நேரக்கூடும். தொழு நோய் போன்றவற்றால் அக்குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் முடவர்களாகக் கூடும். யுத்தத்தில் மரிக்கக்கூடும், உண்ண உணவின்றி வாழக்கூடும்!” என்றான்.
30கிபியோனில் நடந்த யுத்தத்தில் தங்கள் சகோதரனாகிய ஆசகேலை அப்னேர் கொன்றதால் யோவாபும் அவனது சகோதரன் அபிசாயும் அப்னேரைக் கொன்றார்கள்.
31-32யோவாபிடமும், யோவாபுடனிருந்த எல்லா ஜனங்களிடமும் தாவீது, “உங்கள் ஆடைகளைக் கிழித்து துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். அப்னேருக்காக அழுங்கள்” என்றான். அவர்கள் எப்ரோனில் அப்னேரைப் புதைத்தார்கள். அடக்கத்திற்கு தாவீது சென்றிருந்தான். தாவீது ராஜாவும் எல்லா ஜனங்களும் கல்லறையருகே அப்னேருக்காக அழுதனர்.
33அப்னேரின் அடக்கத்தின்போது தாவீது ராஜா இந்த சோக கீதத்தைப் பாடினான்:
“அறிவில்லாத குற்றவாளியைப்போல அப்னேர் மரித்தானா?
34அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை.
கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!”
அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர். 35அந்த நாள் முழுவதும் ஜனங்கள் தாவீதிடம் வந்து அப்பம் உண்ணுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் தாவீது விசேஷ வாக்குறுதி செய்திருந்தான். அவன், “சூரியன் மறையும் முன்னர் நான் ரொட்டியையோ, வேறு உணவையோ உட்கொண்டால் தேவன் என்னைத் தண்டிப்பாராக” என்றான். 36எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது ராஜாவின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். 37நேரின் குமாரனாகிய அப்னேரைத் தாவீது ராஜா கொல்லவில்லையென யூதா ஜனங்களும் இஸ்ரவேலரும் புரிந்துக்கொண்டனர்.
38தாவீது ராஜா அதிகாரிகளை நோக்கி, “இஸ்ரவேலில் இன்று ஒரு முக்கியமான தலைவன் மரித்துவிட்டான் என்பதை அறிவீர்கள். 39இதே நாளில் நான் ராஜாவாகவும், அபிஷேகம் செய்யப்பட்டேன். இந்த செருயாவின் குமாரர்கள் எனக்கு மிகுந்த துன்பத்தை கொடுத்துவிட்டனர். அவர்கள் தவறுக்கேற்ற தண்டனையை கர்த்தர் அளிப்பார் என நம்புகிறேன்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சாமுவேலின் இரண்டாம் புத்தகம் 3: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்