ரூத் 1:15-21

ரூத் 1:15-21 TCV

அப்பொழுது நகோமி அவளிடம், “பார், உன் சகோதரி தன் மக்களிடத்திற்கும், தன் தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப் போகிறாள். நீயும் அவளுடன் திரும்பிப்போ” என்றாள். ஆனால் ரூத் அவளிடம், “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார். நீங்கள் சாகும் இடத்தில் நானும் சாவேன், அங்கேயே நான் அடக்கம் செய்யப்படுவேன். மரணத்தைத் தவிர வேறேதாவது உங்களையும், என்னையும் பிரித்தால் யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்றாள். ரூத் தன்னுடன் வருவதற்கு மனவுறுதியாயிருப்பதைக் கண்ட நகோமி, அதற்குப் பின்னும் அவளை வற்புறுத்தவில்லை. எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம்வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, அவர்களைக்குறித்து பட்டணத்து மக்கள் எல்லோரும் பரபரப்படைந்தார்கள். பெண்களோ வியப்புற்று, “இவள் நகோமியாயிருக்குமோ?” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது அவள் அவர்களிடம், “நீங்கள் என்னை நகோமி, என்று அழைக்கவேண்டாம். என்னை மாரா என்றழையுங்கள். ஏனெனில் எல்லாம் வல்லவர் என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் யெகோவாவோ என்னை வெறுமையாகவே திருப்பிக் கொண்டுவந்துள்ளார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்கவேண்டும்? யெகோவா என்னைத் துன்புறுத்தினார். எல்லாம் வல்லவர் என்மேல் அவலத்தைக் கொண்டுவந்தார்” என்றாள்.