ரூத் 1:15-21

ரூத் 1:15-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நகோமி அவளிடம், “பார், உன் சகோதரி தன் மக்களிடத்திற்கும், தன் தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப் போகிறாள். நீயும் அவளுடன் திரும்பிப்போ” என்றாள். ஆனால் ரூத் அவளிடம், “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார். நீங்கள் சாகும் இடத்தில் நானும் சாவேன், அங்கேயே நான் அடக்கம் செய்யப்படுவேன். மரணத்தைத் தவிர வேறேதாவது உங்களையும், என்னையும் பிரித்தால் யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்றாள். ரூத் தன்னுடன் வருவதற்கு மனவுறுதியாயிருப்பதைக் கண்ட நகோமி, அதற்குப் பின்னும் அவளை வற்புறுத்தவில்லை. எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம்வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, அவர்களைக்குறித்து பட்டணத்து மக்கள் எல்லோரும் பரபரப்படைந்தார்கள். பெண்களோ வியப்புற்று, “இவள் நகோமியாயிருக்குமோ?” என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது அவள் அவர்களிடம், “நீங்கள் என்னை நகோமி, என்று அழைக்கவேண்டாம். என்னை மாரா என்றழையுங்கள். ஏனெனில் எல்லாம் வல்லவர் என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் யெகோவாவோ என்னை வெறுமையாகவே திருப்பிக் கொண்டுவந்துள்ளார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்கவேண்டும்? யெகோவா என்னைத் துன்புறுத்தினார். எல்லாம் வல்லவர் என்மேல் அவலத்தைக் கொண்டுவந்தார்” என்றாள்.

ரூத் 1:15-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவள்: இதோ, உன்னுடைய சகோதரி தன்னுடைய மக்களிடத்திற்கும் தன்னுடைய தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பின்னே திரும்பிப்போ என்றாள். அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்செய்யப்படுவேன்; மரணத்தைத்தவிர வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். அவள் தன்னோடு வர மனஉறுதியாக இருக்கிறதைக் கண்டு, அதன்பின்பு அதைக்குறித்து அவளோடு ஒன்றும் பேசவில்லை. அப்படியே இருவரும் பெத்லெகேம்வரைக்கும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊர் மக்கள் எல்லோரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; யெகோவா என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; யெகோவா என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.

ரூத் 1:15-21 பரிசுத்த பைபிள் (TAERV)

நகோமியோ அவளிடம், “பார், உனது சகோதரி தனது சொந்த ஜனங்களிடமும் தெய்வங்களிடமும் சென்றாள். எனவே, நீயும் அவளைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்” என்றாள். ஆனால் ரூத், “உம்மைவிட்டு விலகும்படி என்னை வற்புறுத்த வேண்டாம்! என் சொந்தக்காரர்களிடம் திரும்பிப் போகுமாறு என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். என்னை உம்மோடு வரவிடும். நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன். நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்” என்றாள். ரூத் தன்னோடு வர மிகவும் விரும்புவதை நகோமி அறிந்துக்கொண்டாள். எனவே நகோமி அவளோடு விவாதம் செய்வதை நிறுத்திவிட்டாள். நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள். ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார். நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்.

ரூத் 1:15-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப்போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள். அதற்கு ரூத்: நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை. அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

ரூத் 1:15-21

ரூத் 1:15-21 TAOVBSI