ரோமர் 8:31-39

ரோமர் 8:31-39 TCV

ஆகையால், இவைகளைப் பற்றி இதற்கு மேலும் நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால், யார் நமக்கு எதிராய் இருக்கமுடியும்? இறைவன் தம்முடைய சொந்த மகனையே விட்டுவைக்காமல், நம் எல்லோருக்காகவும் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தாரே. அப்படிச் செய்தபின், அவர் தம்முடைய மகனுடனேகூட நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கிருபையாய் கொடுக்காதிருப்பாரோ? இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்மேல் குற்றம் சுமத்துவது யார்? அவர்களை நீதிமான்களாக்குவது இறைவன் அல்லவா? அவர்களைத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்குவது யார்? யாராலும் முடியாது. ஏனெனில் மரித்தவரும், அதிலும் மேலாக உயிருடன் எழுப்பப்பட்டவருமான கிறிஸ்து இயேசு, இறைவனுடைய வலதுபக்கத்தில் இருந்து நமக்காக பரிந்து மன்றாடுகிறாரே. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் யார்? கஷ்டங்களோ, துன்பங்களோ, துன்புறுத்தல்களோ, பஞ்சமோ, நிர்வாணமோ, ஆபத்தோ, பட்டயமோ எவை நம்மைப் பிரிக்கும்? “உமக்காகவே நாங்கள் நாள்முழுவதும் மரணத்தை சந்திக்கிறோம்; அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மேல் அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகின்றோம். ஏனெனில், சாவோ வாழ்வோ, இறைத்தூதர்களோ பிசாசுகளோ, நிகழ்காலமோ எதிர்காலமோ, எத்தகைய வல்லமைகளோ எவையும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பதில் நான் மனவுறுதி உடையவனாய் இருக்கிறேன். மேலே வானத்திலுள்ளவைகளோ, கீழே ஆழத்திலுள்ளவைகளோ, அல்லது படைக்கப்பட்டவைகளிலுள்ள வேறு எதுவும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.

ரோமர் 8:31-39 க்கான வீடியோ