ரோமர் 8:31-39
ரோமர் 8:31-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகையால், இவைகளைப் பற்றி இதற்கு மேலும் நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால், யார் நமக்கு எதிராய் இருக்கமுடியும்? இறைவன் தம்முடைய சொந்த மகனையே விட்டுவைக்காமல், நம் எல்லோருக்காகவும் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தாரே. அப்படிச் செய்தபின், அவர் தம்முடைய மகனுடனேகூட நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கிருபையாய் கொடுக்காதிருப்பாரோ? இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்மேல் குற்றம் சுமத்துவது யார்? அவர்களை நீதிமான்களாக்குவது இறைவன் அல்லவா? அவர்களைத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்குவது யார்? யாராலும் முடியாது. ஏனெனில் மரித்தவரும், அதிலும் மேலாக உயிருடன் எழுப்பப்பட்டவருமான கிறிஸ்து இயேசு, இறைவனுடைய வலதுபக்கத்தில் இருந்து நமக்காக பரிந்து மன்றாடுகிறாரே. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் யார்? கஷ்டங்களோ, துன்பங்களோ, துன்புறுத்தல்களோ, பஞ்சமோ, நிர்வாணமோ, ஆபத்தோ, பட்டயமோ எவை நம்மைப் பிரிக்கும்? “உமக்காகவே நாங்கள் நாள்முழுவதும் மரணத்தை சந்திக்கிறோம்; அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் இவை எல்லாவற்றிலும், நம்மேல் அன்பு வைத்தவரின் மூலமாய் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகின்றோம். ஏனெனில், சாவோ வாழ்வோ, இறைத்தூதர்களோ பிசாசுகளோ, நிகழ்காலமோ எதிர்காலமோ, எத்தகைய வல்லமைகளோ எவையும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பதில் நான் மனவுறுதி உடையவனாய் இருக்கிறேன். மேலே வானத்திலுள்ளவைகளோ, கீழே ஆழத்திலுள்ளவைகளோ, அல்லது படைக்கப்பட்டவைகளிலுள்ள வேறு எதுவும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலிருக்கும் இறைவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
ரோமர் 8:31-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
ரோமர் 8:31-39 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம். வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” என எழுதப்பட்டுள்ளது. தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
ரோமர் 8:31-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்