ரோமர் 6:1-14

ரோமர் 6:1-14 TCV

ஆகவே, நாம் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருப்போமா? இல்லவேயில்லை; நிச்சயமாய் அப்படி செய்யக்கூடாது. பாவத்திற்கு நாம் இறந்துவிட்டோமே. அப்படியிருக்க, இன்னும் நாம் எப்படி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்? கிறிஸ்து இயேசுவில் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட நாம் எல்லோரும், அவருடைய மரணத்துக்குள்தானே திருமுழுக்கைப் பெற்றோம் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? பிதா தம்முடைய மகிமையினால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுந்திருக்கச் செய்தார். அதுபோலவே, நாமும் ஒரு புதிதான வாழ்வை வாழும்படிக்கு, திருமுழுக்கின் மூலமாய் மரணத்திற்குள் கிறிஸ்துவுடனே அடக்கம் செய்யப்பட்டோம். இவ்விதமாய், கிறிஸ்துவின் மரணத்தில் இணைந்துகொண்ட நாம், நிச்சயமாகவே அவருடைய உயிர்த்தெழுதலிலும் இணைந்திருப்போம். நம்முடைய பழைய மனித சுபாவம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டது என்பதை நாம் அறிவோம்; இதனால் பாவத்திற்கு அடிமையாயிருந்த உடல் அதன் வல்லமை இழந்துபோகும்; நாம் இனியொருபோதும் பாவத்திற்கு அடிமை இல்லை. ஏனெனில் யாராவது மரித்தால், அவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான். இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம். கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதால், அவர் இனிமேல் இறப்பதேயில்லை. மரணம் அவர்மேல் அதிகாரம் செலுத்தமுடியாது; இதை நாம் அறிவோம். கிறிஸ்து இறந்தபோது, பாவத்தை முறியடிக்க ஒரேமுறை இறந்தார். இப்பொழுது, அவர் வாழ்கின்ற வாழ்வை, இறைவனுக்கென்றே வாழ்கிறார். இவ்விதமாகவே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு இறந்தவர்கள் என்றும், இறைவனுக்காக கிறிஸ்து இயேசுவில் வாழ்கிறவர்கள் என்றும் உறுதியாய் எண்ணிக்கொள்ளுங்கள். எனவே, அழிந்துபோகிற உங்கள் உடலில் பாவம் ஆளுகைசெய்ய இடங்கொடுக்க வேண்டாம், அதனுடைய தீய ஆசைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டாம். உங்கள் உடலின் உறுப்புக்களை அநீதியின் கருவிகளாகப், பாவத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டாம். மாறாக, நீங்கள் சாவிலிருந்து வாழ்வு பெற்றவர்களாய், உங்களை இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடலின் உறுப்புக்களையும், அவருக்கு நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுங்கள். பாவம் உங்களை ஆளுகை செய்யாது. ஏனென்றால், நீங்கள் மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல, கிருபைக்கே உள்ளானவர்கள்.

ரோமர் 6:1-14 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரோமர் 6:1-14