ரோமர் 6:1-14

ரோமர் 6:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே, நாம் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படி தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருப்போமா? இல்லவேயில்லை; நிச்சயமாய் அப்படி செய்யக்கூடாது. பாவத்திற்கு நாம் இறந்துவிட்டோமே. அப்படியிருக்க, இன்னும் நாம் எப்படி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்? கிறிஸ்து இயேசுவில் திருமுழுக்கைப் பெற்றுக்கொண்ட நாம் எல்லோரும், அவருடைய மரணத்துக்குள்தானே திருமுழுக்கைப் பெற்றோம் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? பிதா தம்முடைய மகிமையினால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுந்திருக்கச் செய்தார். அதுபோலவே, நாமும் ஒரு புதிதான வாழ்வை வாழும்படிக்கு, திருமுழுக்கின் மூலமாய் மரணத்திற்குள் கிறிஸ்துவுடனே அடக்கம் செய்யப்பட்டோம். இவ்விதமாய், கிறிஸ்துவின் மரணத்தில் இணைந்துகொண்ட நாம், நிச்சயமாகவே அவருடைய உயிர்த்தெழுதலிலும் இணைந்திருப்போம். நம்முடைய பழைய மனித சுபாவம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டது என்பதை நாம் அறிவோம்; இதனால் பாவத்திற்கு அடிமையாயிருந்த உடல் அதன் வல்லமை இழந்துபோகும்; நாம் இனியொருபோதும் பாவத்திற்கு அடிமை இல்லை. ஏனெனில் யாராவது மரித்தால், அவன் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான். இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம். கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதால், அவர் இனிமேல் இறப்பதேயில்லை. மரணம் அவர்மேல் அதிகாரம் செலுத்தமுடியாது; இதை நாம் அறிவோம். கிறிஸ்து இறந்தபோது, பாவத்தை முறியடிக்க ஒரேமுறை இறந்தார். இப்பொழுது, அவர் வாழ்கின்ற வாழ்வை, இறைவனுக்கென்றே வாழ்கிறார். இவ்விதமாகவே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு இறந்தவர்கள் என்றும், இறைவனுக்காக கிறிஸ்து இயேசுவில் வாழ்கிறவர்கள் என்றும் உறுதியாய் எண்ணிக்கொள்ளுங்கள். எனவே, அழிந்துபோகிற உங்கள் உடலில் பாவம் ஆளுகைசெய்ய இடங்கொடுக்க வேண்டாம், அதனுடைய தீய ஆசைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டாம். உங்கள் உடலின் உறுப்புக்களை அநீதியின் கருவிகளாகப், பாவத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டாம். மாறாக, நீங்கள் சாவிலிருந்து வாழ்வு பெற்றவர்களாய், உங்களை இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடலின் உறுப்புக்களையும், அவருக்கு நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுங்கள். பாவம் உங்களை ஆளுகை செய்யாது. ஏனென்றால், நீங்கள் மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டவர்களல்ல, கிருபைக்கே உள்ளானவர்கள்.

ரோமர் 6:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகவே, என்னசொல்லுவோம்? கிருபை பெருகுவதற்காகப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? சொல்லக்கூடாதே. பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி வாழ்வோம்? கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிய ஜீவனுள்ளவர்களாக நடந்துகொள்வதற்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவோடு அடக்கம் பண்ணப்பட்டோம். ஆகவே, அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்திற்கு அடிமையாக இல்லாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோவதற்காக, நம்முடைய பழைய மனிதன் அவரோடு சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேமுறை மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படிவதற்காக, மரணத்திற்குரிய உங்களுடைய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யாமல் இருக்கட்டும். நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறதினால், பாவம் உங்களை மேற்கொள்ளமுடியாது.

ரோமர் 6:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும், மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்? நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம். ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம். நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம். எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான். நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும். கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது! அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது. அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.

ரோமர் 6:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.