ரோமர் 15:5-19

ரோமர் 15:5-19 TCV

பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார். இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.” இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான். எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள். எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன். ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி, யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன். ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன்.

ரோமர் 15:5-19 க்கான வீடியோ