ரோமர் 15:5-19
ரோமர் 15:5-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பொறுமையும் உற்சாகத்தையும் கொடுக்கின்ற இறைவன், நீங்கள் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுகையில் உங்களுக்கிடையே ஒற்றுமையின் ஆவியைத் தருவாராக. அப்பொழுது நீங்கள் ஒரே மனதுள்ளவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவீர்கள். ஆகவே, இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். இது இறைவனுக்குத் துதியைக் கொண்டுவரும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவன் உண்மையுள்ளவர் என்பதைக் காண்பிப்பதற்காக, கிறிஸ்து யூதருக்கு ஊழியக்காரனாக வந்தார். இவ்விதம் இறைவன் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை அவர் உறுதிப்படுத்தினார். இதனால், யூதரல்லாதவர்களும் இறைவனுடைய இரக்கத்திற்காக இறைவனை மகிமைப்படுத்தும்படி இப்படிச் செய்தார். இதைப்பற்றி வேதவசனத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது: “ஆகையால், யூதரல்லாதவர்களிடையே நான் உம்மைத் துதிப்பேன்; நான் உமது பெயருக்குத் துதிப்பாடல் பாடுவேன்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே! கர்த்தருடைய மக்களுடன் நீங்களும் சந்தோஷப்படுங்கள்.” மேலும், பரிசுத்த வேதம் சொல்லுகிறதாவது: “யூதரல்லாத மக்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதித்துப் பாடுங்கள்.” இன்னும் ஏசாயா, “ஈசாயின் வேர் முளைத்தெழும்பும். ஜனங்களை ஆளுகை செய்கிறவராய் அவர் எழும்புவார்; யூதரல்லாத மக்கள் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்” என்று சொல்கிறான். எதிர்பார்ப்பைக் கொடுக்கும் இறைவன், நீங்கள் அவரில் நம்பிக்கையாயிருக்கும்போது, உங்களை எல்லாச் சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புவாராக. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உங்கள் எதிர்பார்ப்பில் பெருகுவீர்கள். எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன். ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி, யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன். ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன்.
ரோமர் 15:5-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக. எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்; “யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது. மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார். மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார். மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான். பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன். அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன். எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.
ரோமர் 15:5-19 பரிசுத்த பைபிள் (TAERV)
பொறுமையும் பலமும் தேவனிடமிருந்து வந்தன. இயேசு கிறிஸ்து விரும்புகிற வழியை நீங்கள் உங்களுக்குக்குள் ஏற்றுக்கொள்ள தேவனிடம் பிரார்த்திப்பேன். எனவே இதய ஒற்றுமையுடனும் ஒருமித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனைப் புகழ்வீர்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டார். எனவே நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தேவனுக்கு மகிமையைக் கொண்டு வரும். இதனால் யூதர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்து யூதர்களுக்குப் பணியாளர் ஆனார். இதன் மூலம் அவர் தேவனுடைய வாக்குறுதிகள் உண்மையானவை எனக் காட்டினார். கிறிஸ்து யூதர்களின் தந்தையர்க்குக் கொடுத்த வாக்குறுதியை நிரூபித்துவிட்டார். இதனால் யூதரல்லாதவர்கள் தேவனுடைய இரக்கத்துக்காக அவரை மகிமைப்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது: “யூதர் அல்லாத மக்களுக்கிடையில் நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது பெயரைப் பாராட்டிப் பாடுவேன்.” மேலும் வேதவாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள்.” மேலும் வேத வாக்கியம் கூறுகிறது: “யூதரல்லாத நீங்கள் கர்த்தரைப் புகழுங்கள். அனைத்து மக்களும் கர்த்தரைப் புகழ வேண்டும்.” ஏசாயா இப்படி கூறுகிறார்: “ஈசாயின் குடும்பத்திலிருந்து ஒருவர் வருவார். யூதரல்லாதவர்களை அவர் ஆள்வார். அவரால் யூதரல்லாதவர்களும் நம்பிக்கை அடைவார்கள்.” தேவன் வழங்கும் விசுவாசம் உங்களை சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் நிரப்பட்டும் என்று பிரார்த்திக்கிறேன். பிறகு உங்களுக்கு மேலும், மேலும் விசுவாசம் பெருகும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் அது நிரம்பி வழியும். எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர். நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன்.
ரோமர் 15:5-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், பிதாக்களுக்குப்பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.