லூக்கா 7:36-43

லூக்கா 7:36-43 TCV

பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள். இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள். இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அவன், “போதகரே சொல்லும்” என்றான். அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார். அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 7:36-43