லூக்கா 7:36-43
லூக்கா 7:36-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள். இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள். இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அவன், “போதகரே சொல்லும்” என்றான். அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது. இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார். அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.
லூக்கா 7:36-43 பரிசுத்த பைபிள் (TAERV)
பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார். அப்போது நகரத்தில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். பரிசேயனின் வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே, அழுதுகொண்டே நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து உலரவைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமண தைலத்தைப் பாதங்களில் பூசினாள். தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள், “உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி என்பதை அறிந்திருப்பார்” என்று நினைத்தான். இயேசு பரிசேயனை நோக்கி, “சீமோனே! நான் உனக்குச் சிலவற்றைக் கூறவேண்டும்” என்றார். சீமோன், “போதகரே, சொல்லுங்கள், கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான். “இரண்டு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம் கடனாக வாங்கியிருந்தான். பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமல் போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் யார் அதிக அளவில் கடன் கொடுத்த மனிதனை நேசிப்பார்கள்?” என்று கேட்டார் இயேசு. சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான். இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார்.
லூக்கா 7:36-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி
லூக்கா 7:36-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி