லூக்கா 2:41-52

லூக்கா 2:41-52 TCV

இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவதற்கு, எருசலேமுக்குப் போவார்கள். இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குச் சென்றார்கள். பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால், பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள். தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குபின், அவர் ஆலய முற்றத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள். அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் பரிதவிப்போடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள். அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது தந்தையின் வீட்டில் இருக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அவர்களோ, இயேசு தங்களுக்குச் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள். இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் இறைவனுடைய கிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா 2:41-52