லூக்கா 2:41-52

லூக்கா 2:41-52 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா என்ற பண்டிகையைக் கொண்டாடுவதற்கு, எருசலேமுக்குப் போவார்கள். இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்குச் சென்றார்கள். பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால், பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள். தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒரு நாள் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாதபோது, அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குபின், அவர் ஆலய முற்றத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள். அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? உன் தகப்பனும் நானும் பரிதவிப்போடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோமே” என்றாள். அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது தந்தையின் வீட்டில் இருக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அவர்களோ, இயேசு தங்களுக்குச் சொன்னதை விளங்கிக்கொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். ஆனால் அவருடைய தாயோ இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள். இயேசு ஞானத்திலும் வளர்த்தியிலும் இறைவனுடைய கிருபையிலும் மனிதர் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

லூக்கா 2:41-52 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசுவின் பெற்றோர் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள். இயேசுவிற்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப் போனார்கள். பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாமல் இருந்தது. இயேசு பயணம் செய்கிறவர்களின் கூட்டத்தோடு இருப்பார் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள், ஒருநாள் பயணம் சென்றபின்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இயேசுவைத் தேடினார்கள். அவர் அங்கே இல்லாததினால் அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். மூன்று நாட்களுக்குப்பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர்கள் நடுவில் உட்கார்ந்திருப்பதையும், அவர்கள் பேசுகிறதைக் கவனிப்பதையும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்பதையும் பார்த்தார்கள். இயேசு பேசுவதைக்கேட்ட எல்லோரும் அவருடைய புத்தியையும் அவர் போதகர்களுடைய கேள்விகளுக்கு சொன்ன பதில்களையும்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். இயேசுவானவர் ஞானத்திலும், வளர்ச்சியிலும், தேவகிருபையிலும், மனிதர்கள் தயவிலும் அதிகமாக வளர்ந்தார்.

லூக்கா 2:41-52 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள். இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

லூக்கா 2:41-52 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகைமுறைமையின்படி எருசலேமுக்குப்போய், பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். தாய் தகப்பன்மாரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.