அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். அதைக் கேட்டவுடன் யுத்தத்திற்கு அவனை சந்திக்கப் போகுமுன்பு பின்வரும் செய்தியுடன் தூதுவரை எருசலேமுக்கு எசேக்கியாவிடம் அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? எனது முற்பிதாக்கள் அழித்த கோசான், ஆரான், ரேசேப் ஆகிய நாடுகளையும், தெலாசாரில் வசிக்கும் ஏதேன் மக்களையும் அவர்களின் தெய்வங்கள் காப்பாற்றினவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.” எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான். எசேக்கியா யெகோவாவிடம் மன்றாடி, “சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களுக்கிடையில் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் இறைவனே, பூமியின் அரசுகள் எல்லாவற்றின்மேலும் நீர் ஒருவரே இறைவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் நீரே. யெகோவாவே, உம்முடைய செவியைச் சாய்த்துக்கேளும். யெகோவாவே, உம்முடைய கண்களைத் திறந்து பாரும். உயிரோடிருக்கும் இறைவனை நிந்திப்பதற்கு சனகெரிப் அனுப்பியுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் கேளும். “யெகோவாவே, அசீரிய அரசர்கள் அந்த மக்கள் கூட்டங்களையும், அவர்களுடைய நிலங்களையும் பாழாக்கியிருப்பது உண்மைதான். அவர்கள் அவர்களுடைய தெய்வங்களையுங்கூட நெருப்பில்போட்டு அழித்துவிட்டார்கள். ஏனெனில் அவை மனிதரின் கைகளினால் வடிவமைக்கப்பட்ட மரமும், கல்லுமேயல்லாமல் தெய்வங்களல்ல. இப்போதும் எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் மட்டுமே இறைவனாகிய யெகோவா என்று பூமியிலுள்ள எல்லா அரசுகளும் அறியும்படி அவனுடைய கையிலிருந்து எங்களை விடுவியும்” என்று மன்றாடினான். அதன்பின் ஆமோஸின் மகன் ஏசாயா, எசேக்கியாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: அசீரிய அரசன் சனகெரிப்பைக் குறித்து நீ என்னிடம் விண்ணப்பம் பண்ணினாயே, ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே: “சீயோனின் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள். எருசலேமின் மகள் நீ பயந்து ஓடுவதைப் பார்த்து, உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ஏசாயா 37
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா 37:9-22
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்