ஏசாயா 37:9-22
ஏசாயா 37:9-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். அதைக் கேட்டவுடன் யுத்தத்திற்கு அவனை சந்திக்கப் போகுமுன்பு பின்வரும் செய்தியுடன் தூதுவரை எருசலேமுக்கு எசேக்கியாவிடம் அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? எனது முற்பிதாக்கள் அழித்த கோசான், ஆரான், ரேசேப் ஆகிய நாடுகளையும், தெலாசாரில் வசிக்கும் ஏதேன் மக்களையும் அவர்களின் தெய்வங்கள் காப்பாற்றினவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.” எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான். எசேக்கியா யெகோவாவிடம் மன்றாடி, “சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களுக்கிடையில் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் இறைவனே, பூமியின் அரசுகள் எல்லாவற்றின்மேலும் நீர் ஒருவரே இறைவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் நீரே. யெகோவாவே, உம்முடைய செவியைச் சாய்த்துக்கேளும். யெகோவாவே, உம்முடைய கண்களைத் திறந்து பாரும். உயிரோடிருக்கும் இறைவனை நிந்திப்பதற்கு சனகெரிப் அனுப்பியுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் கேளும். “யெகோவாவே, அசீரிய அரசர்கள் அந்த மக்கள் கூட்டங்களையும், அவர்களுடைய நிலங்களையும் பாழாக்கியிருப்பது உண்மைதான். அவர்கள் அவர்களுடைய தெய்வங்களையுங்கூட நெருப்பில்போட்டு அழித்துவிட்டார்கள். ஏனெனில் அவை மனிதரின் கைகளினால் வடிவமைக்கப்பட்ட மரமும், கல்லுமேயல்லாமல் தெய்வங்களல்ல. இப்போதும் எங்கள் இறைவனாகிய யெகோவாவே, நீர் மட்டுமே இறைவனாகிய யெகோவா என்று பூமியிலுள்ள எல்லா அரசுகளும் அறியும்படி அவனுடைய கையிலிருந்து எங்களை விடுவியும்” என்று மன்றாடினான். அதன்பின் ஆமோஸின் மகன் ஏசாயா, எசேக்கியாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினான். “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: அசீரிய அரசன் சனகெரிப்பைக் குறித்து நீ என்னிடம் விண்ணப்பம் பண்ணினாயே, ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே: “சீயோனின் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள். எருசலேமின் மகள் நீ பயந்து ஓடுவதைப் பார்த்து, உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள்.
ஏசாயா 37:9-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்திற்குப் பிரதிநிதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவர்களுடைய தெய்வங்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்த கடிதத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போய் அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து, யெகோவாவை நோக்கி: சேனைகளின் யெகோவாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். யெகோவாவே, அசீரியா ராஜாக்கள் அந்த தேசங்களையும், அவர்கள் நிலங்களையும் நாசமாக்கி, அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் ஒருவரே யெகோவா என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் செய்தான். அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே. அவனைக்குறித்துக் யெகோவா சொல்கிற வசனமாவது: மகளாகிய சீயோன் என்னும் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்செய்கிறாள்; மகளாகிய எருசலேம் உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
ஏசாயா 37:8-22 பரிசுத்த பைபிள் (TAERV)
அசீரியா ராஜா ஒரு அறிக்கையைப் பெற்றான். அந்த அறிக்கை, “எத்தியோப்பியா ராஜாவாகிய திராக்கா உம்மோடு போரிட வருகிறான்” என்று சொன்னது. எனவே, அசீரியா ராஜா லாகீசை விட்டு லிப்னாவுக்குத் திரும்பிப்போனான். தளபதி இதனைக் கேள்விப்பட்டான். அவன் லிப்னா நகரத்திற்குப்போனான். அங்கே அசீரியா ராஜா போரிட்டுக்கொண்டிருந்தான். பிறகு தளபதி எசேக்கியாவிற்குத் தூதுவர்களை அனுப்பினான். “நீங்கள் இவற்றை யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் சொல்லவேண்டுவன: ‘நீங்கள் நம்புகிற தெய்வங்களால் முட்டாளாக வேண்டாம். “அசீரியா ராஜாவால் எருசலேம் தோற்கடிக்கப்படும்படி தேவன் விடமாட்டார்” என்று சொல்லாதீர்கள். கவனியுங்கள், அசீரியாவின் ராஜாக்கள் மற்ற நாடுகளுக்குச் செய்ததைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் மற்றவர்களை முற்றிலுமாய் அழித்தார்கள். நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நம்புகிறீர்களா? இல்லை. அந்த ஜனங்களின் தெய்வங்கள் அவர்களைக் காப்பாற்றினார்களா? இல்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். எனது ஜனங்கள் கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்களையும் தோற்கடித்தனர். ஆமாத் அர்பாத் ராஜா எங்கே இருக்கிறார்கள்? செப்பர்வாயீம் ராஜா எங்கே இருக்கிறான்? ஏனா, ஈவா நகரங்களின் ராஜாக்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் முறியடிக்கப்பட்டனர்! அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர்!’” என்று தளபதி சொன்னான். எசேக்கியா தூதுவர்களிடமிருந்து செய்தியைப் பெற்று வாசித்தான். பிறகு, எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திற்குச் சென்றான். எசேக்கியா கடிதத்தைத் திறந்து கர்த்தருக்கு முன்பு வைத்தான். எசேக்கியா கர்த்தரிடம் ஜெபம் செய்யத் தொடங்கினான். எசேக்கியா சொன்னான்: “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் ராஜாவாக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்! கர்த்தாவே நான் சொல்வதைக் கேளும். சனகெரிப்பிடமிருந்து வந்த செய்தியை உமது கண்களைத் திறந்து பாரும். எனக்குச் சனகெரிப் இந்தச் செய்தியை அனுப்பினான். ஜீவனுள்ள தேவனாகிய உம்மைப்பற்றி தீயச் செய்திகளை இது சொல்கிறது. கர்த்தாவே, அசீரியாவின் ராஜா உண்மையிலேயே அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் அழித்திருக்கிறான். கர்த்தாவே, அந்த நாடுகளில் உள்ள தெய்வங்களை அசீரியாவின் ராஜாக்கள் எரித்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவை உண்மையான தெய்வங்கள் அல்ல. அவைகள் மனிதர்களால் செய்யப்பட்ட சிலைகள்தான். அவைகள் மரமும் கல்லும் தான். எனவேதான் அசீரியாவின் ராஜாக்களால் அவற்றை அழிக்க முடிந்தது. ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா ராஜாவின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான். பிறகு ஆமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், ‘அசீரியா ராஜாவாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப்பற்றி நீ ஜெபம் செய்தாய். நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.’ “சனகெரிப்பைக் குறித்து கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்
ஏசாயா 37:9-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, கர்த்தரை நோக்கி: சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.