மத் 5:3-16

மத் 5:3-16 IRVTAM

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள். நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.