லூக் 2:1-24

லூக் 2:1-24 IRVTAM

அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள். அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள். மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு, முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.