சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்Sample
ஒரு நம்பகமான நாமம்
உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள் - சங்கீதம் 9:10
இரசல், ஒரு மோட்டார் பாதை சேவை நிலையத்திலிருக்கையில், உதவிக்காக பீதியடைந்து கூச்சலிடும் சத்தத்தைக் கேட்டார். ஒருவர், தீவிரமான மாரடைப்பினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்கு உடனடி உதவி தேவைப்பட்டது. இரசல் அந்த சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, ஆலோசனைகள் வழங்கி, துணைமருத்துவர்கள் வரும்வரை CPR முதலுதவி வழங்கினார்.
அந்த மனிதர் பிரதிபலிப்பு காட்ட தவறியபோது, அங்கே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பிழையான வழிநடத்தலுக்கான ஆலோசனைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். இறுதியில், இரசல், “நான் செய்வதை நான் அறிவேன். நான் ரோயல் மரைன்ஸ் (Royal Marines) இல் வேலைசெய்கிறேன்” என்றார். எப்படியோ, கூடியிருந்தவர்கள் ஆறுதலடைந்தனர் - இவ்வாறான அவசர சந்தர்ப்பங்களில் செயற்பட ரோயல் மரைன் தான் சரியான நபர். அவர்கள் அதிசிறந்த பயிற்சி, தகுதி மற்றும் நம்பகத்தன்மை உள்ளவர்கள் ஆவர்.
இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் ரோயல் மரைன் ஊக்கமளிக்கக் கூடுமாயின், நாம் எத்தகைய பிரச்சினையில் இருக்கும்போதும், தேவனுடைய நாமம் எவ்வளவு அதிகமாய் நம்பிக்கை தந்து ஊக்கமளிக்கும். “கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை. ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் எழுதுகிறார் (சங்கீதம் 9:10).
தேவனுடைய நாமத்தின் அர்த்தங்களை எண்ணிப்பார்க்கும்போது, எவ்வாறான உண்மைகள் எமது நினைவிற்கு வருகிறது? “கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்” “சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்வார்” மற்றும், “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்” (சங்கீதம் 9:7-9). இவையாவும், நமது அனுதின வாழ்விலும், அவசரங்களிலும் நாம் தங்கியிருக்கக்கூடிய தேவனுடைய முழுமையான மற்றும் நித்திய குணாதிசயங்கள் ஆகும்.
இன்று நாம் எத்தகைய நெருக்கடியில் இருந்தாலும், நாம் தேவனுடைய நாமத்தை நம்பியிருக்க முடியும். அவரே இராஜாவாக அரசாளுகிறவர், மற்றும் என்றும் அவரே “நெருக்கப்படுகிற காலங்களில் தஞ்சமானவர்” (வசனம் 9) – டெபி பிரலிக்
பிரதிபலிப்பு: தேவனுடைய நாமம் உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? சமாதானமுள்ள நேரத்தில் அல்லது நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவரது குணாதிசயங்களைத் தியானிப்பது உங்களுக்கு எவ்வாறு உறுதியையும் நம்பிக்கையையும் தருகிறது?
ஜெபம்: பரலோக பிதாவே, நீதியாய் நீர் ஆளுகை செய்கிறதற்காக நன்றி. நீரே எனது அடைக்கலம். நான் எனது நம்பிக்கையை உம்மில் மாத்திரமே வைத்திருக்கிறேன்.
Scripture
About this Plan
நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.
More