மத்தேயு 7

7
மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்தல்
1“நீங்களும் குற்றவாளிகளாகத் தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்புச் செய்யாதிருங்கள்; 2நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பது போலவே, நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3“நீ உனது கண்ணிலுள்ள மரக்கட்டையைக் கவனிக்கத் தவறி, உனது சகோதரனின் கண்ணிலுள்ள சிறு துரும்பைப் பார்ப்பது ஏன்? 4உன் கண்ணில் மரக்கட்டை இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள சிறு துரும்பை எடுத்துப் போடுகிறேன்’ என எப்படிச் சொல்லலாம்? 5வெளிவேடக்காரனே! முதலில் உனது கண்ணிலுள்ள மரக்கட்டையை எடுத்துப் போடு; அப்போது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக உன்னால் தெளிவாகப் பார்க்க முடியும்.
6“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவைகளை மிதித்துவிட்டு, திரும்பி வந்து உங்களைக் குதறிவிடும்.
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்
7“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். 8ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன், கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது.
9“உங்களில் யார் அப்பம் கேட்கும் தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பான்? 10அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு பாம்பைக் கொடுப்பான்? 11நீங்கள் தீயவர்களாய் இருந்தும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்! 12ஆகவே மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; ஏனென்றால் இவையே நீதிச்சட்டத்தினதும் இறைவாக்கினர்களினதும் கருப்பொருள்.
ஒடுக்கமான வாசலும் அகன்ற வாசலும்
13“ஒடுக்கமான வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள். ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. அநேகர் அதன் வழியாகவே உள்ளே நுழைகிறார்கள். 14ஆனால் ஒடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
மரமும் அதன் கனியும்
15“போலி இறைவாக்கினரைக் குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள். 16அவர்களது செயல்களின் விளைவினால் நீங்கள் அவர்களை அறிந்துகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லையே, 17அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். ஆனால் பழுதான மரமோ, பழுதான கனியையே கொடுக்கும். 18நல்ல மரம் பழுதான கனிகளைக் கொடுக்க மாட்டாது, பழுதான மரம் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை. 19நல்ல கனி கொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பினுள் எறியப்படும். 20இப்படியே அவர்களின் செயல்களின் விளைவினால் அவர்களை இனங்கண்டுகொள்வீர்கள்.
உண்மை மற்றும் கள்ளச் சீடர்கள்
21“என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று அழைக்கின்றவர்கள் எல்லோரும் பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கின்ற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கின்றவர்கள் மட்டுமே அதன் உள்ளே செல்வார்கள். 22அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு சொல்லவில்லையா? உமது பெயரில் பேய்களைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள். 23அப்போது நான் அவர்களிடம், ‘இறைவனின் கட்டளைகளை மீறுகிறவர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்று அப்பாலே போங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.
இரு வகையான வீடுகள்
24“எனவே நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கின்ற ஒவ்வொருவனும், கற்பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனிதனைப் போலிருப்பான். 25மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; இருந்தும், அது விழுந்து போகவில்லை. ஏனெனில் அதன் அத்திவாரம் கற்பாறையின் மீது போடப்பட்டிருந்தது. 26ஆனால் எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய மூடனைப் போலிருப்பான். 27மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”
28இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, அவரது போதனையைக் கேட்டு, மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். 29ஏனெனில் அவர் அவர்களது நீதிச்சட்ட ஆசிரியர்களைப் போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் போதித்தார்.

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요