ஆதியாகமம் 14

14
லோத்து பிடிக்கப்படுதல்
1அம்ராப்பேல் சிநெயாரின் ராஜா. அரியோகு ஏலாசாரின் ராஜா. கெதர்லாகோமேர் ஏலாமின் ராஜா. திதியால் கோயம் தேசத்தின் ராஜா. 2இவர்கள் அனைவரும் மற்ற ராஜாக்களோடு சண்டையிட்டனர். சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும் பேலாவின் ராஜாவோடும் (பேலா சோவார் என்றும் அழைக்கப்பட்டான்) அவர்கள் போர் செய்தனர்.
3சித்தீம் பள்ளத்தாக்கில் எல்லா ராஜாக்களும் தம் படைகளோடு கூடினர். (சித்தீம் பள்ளத்தாக்கு இப்போது உப்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.) 4இந்த ராஜாக்கள் 12 ஆண்டுகள் கெதர்லாகோமேருக்குச் சேவைசெய்து 13ஆம் ஆண்டில் கலகம் செய்தார்கள். 514ஆம் ஆண்டிலே கெதர்லாகோமேரும் அவனோடு இருந்த ராஜாக்களும் போருக்கு வந்தனர். இவர்கள் அஸ்தரோத் கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும் காமிலிருந்த சூசிமியரையும், சாவேகீரியத் தாயீமிலே இருந்த ஏமியரையும், 6சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர். 7அதன்பிறகு ராஜா கெதர்லாகோமேர் வடதிசையில் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து அமலேக்கியரின் நாடுகளையும் அத்சாத்சோன் தாமாரிலே இருந்த எமோரியரையும் அழித்து ஒழித்தான்.
8அப்போது சோதோம், அத்மா, கொமோரா, செபோயீம், சோவார் என்னும் பேலா ஆகிய நாடுகளின் ராஜாக்கள் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயம் ராஜாவாகிய திதியாலோடும் சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம் செய்தார்கள். 9எனவே நான்கு ராஜாக்கள் ஐந்து பேருக்கு எதிராக இருந்தனர்.
10அந்த சித்தீம் பள்ளத்தாக்கு முழுவதும் தார் நிறைந்த குழிகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்றோடி வந்து அதில் விழுந்தார்கள். இன்னும் பலர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
11எனவே, சோதோம் மற்றும் கொமோராவினருக்கு உரிய பொருட்களை எல்லாம் அவர்களின் பகைவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது அனைத்து உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஆபிராமின் சகோதரனுடைய குமாரனான லோத்து சோதோமில் வசித்துக்கொண்டிருந்தான். 12அவனையும் எதிரிகள் பிடித்துக்கொண்டார்கள். மேலும் அவனுடைய உடமைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு எதிரிகள் ஓடினார்கள். 13பிடிபடாதவர்களில் ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆபிராம் மம்ரே என்னும் எமோரியனுடைய பூமியில் குடியிருந்தான். மம்ரே, எஸ்கோல், ஆநேர் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உதவுவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். அவர்கள் ஆபிராமுக்கு உதவுவதாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.
ஆபிராம் லோத்தை மீட்கிறான்
14லோத்து கைதுசெய்யப்பட்டதை ஆபிராம் அறிந்துகொண்டான். அவன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்தான் அவர்களிடம் 318 பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர். அவன் அவர்களோடு தாண் நகரம்வரை பகைவர்களைத் துரத்திக்கொண்டு போனான். 15அன்று இரவு அவனும் அவனது வீரர்களும் பகைவரைத் திடீரென்று தாக்கினர். அவர்களைத் தோற்கடித்து தமஸ்குவின் வடக்கேயுள்ள கோபாவரை துரத்தினர். 16பிறகு, பகைவர்கள் எடுத்துசென்ற அனைத்து பொருட்களையும் ஆபிராம் மீட்டுக்கொண்டான். பெண்கள், வேலைக்காரர்கள், லோத்து, அவனது பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
17பிறகு ஆபிராம் கெதர்லாகோமரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்து விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினான். சோதோமின் ராஜா புறப்பட்டு சாவே பள்ளத்தாக்குக்கு வந்து ஆபிராமை வரவேற்றான். (இப்போது இப்பள்ளத்தாக்கு ராஜாவின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.)
மெல்கிசேதேக்
18சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கும் ஆபிராமைச் சந்திக்கப் போனான். இவன் உன்னதமான தேவனின் ஆசாரியன். இவன் அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்தான். 19மெல்கிசேதேக் ஆபிராமை ஆசீர்வாதம் செய்து,
“ஆபிராமே, வானத்தையும் பூமியையும் படைத்த
உன்னதமான தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
20நாம் உன்னதமான தேவனைப் போற்றுவோம்.
உன் பகைவர்களை வெல்ல உனக்கு தேவன் உதவினார்” என்றான்.
போரில் கைப்பற்றியவற்றில் பத்தில் ஒரு பங்கை ஆபிராம் மெல்கிசேதேக்கிற்குக் கொடுத்தான். 21பிறகு சோதோமின் ராஜா ஆபிராமிடம், “இவை எல்லாவற்றையும் நீ உனக்கே வைத்துக்கொள். எனது ஜனங்களை மட்டும் எனக்குக் கொடு அது போதும்” என்றான்.
22ஆனால் ஆபிராமோ சோதோம் ராஜாவிடம், “நான் உன்னதமான தேவனாகிய கர்த்தரிடம் வாக்குப் பண்ணியிருக்கிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான தேவனுக்கு முன்பாக என் கைகள் சுத்தமாயிருக்கிறது. 23உனக்குரிய எதையும் நான் வைத்திருக்க மாட்டேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறேன். நான் உனக்குரிய ஒரு நூல் அல்லது பாதரட்டையின் சிறு வாரையாகிலும் கூட ஏற்கமாட்டேன். ‘நான் ஆபிராமைப் பணக்காரன் ஆக்கினேன்’ என்று நீ சொல்வதை நான் விரும்ப மாட்டேன். 24என்னுடைய இளைஞர்கள் உண்பதற்கான உணவை மட்டுமே ஏற்றுக்கொள்வேன். ஆனால் மற்றவர்களுக்கு அவர்களின் பங்கினைக் கொடுத்துவிடு. நாம் போரில் வென்ற பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள். சிலவற்றை ஆநேர், எஸ்கோல், மம்ரே ஆகியவர்களுக்குக் கொடு. இவர்கள் எனக்குப் போரில் உதவினார்கள்” என்றான்.

하이라이트

공유

복사

None

모든 기기에 하이라이트를 저장하고 싶으신가요? 회원가입 혹은 로그인하세요