Akara Njirimara YouVersion
Akara Eji Eme Ọchịchọ

மத்தேயு 6

6
ஏழைகளுக்குக் கொடுத்தல்
1“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர்கள் முன்பாக, அவர்கள் காண வேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது.
2“ஆகவே நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களின் புகழ்ச்சியை பெறுவதற்காக, வெளிவேடக்காரர்கள் ஜெபஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வது போல செய்ய வேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள். 3ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாமல் செய்யுங்கள்.#6:3 நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவி, உங்கள் நெருங்கியவர்களுக்குக்கூட தெரியக் கூடாது. 4அப்போது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கின்ற உங்கள் பிதா, ஏற்ற வெகுமதியை உங்களுக்கு அளிப்பார்.
மன்றாடல்
5“நீங்கள் மன்றாடும்போது, வெளிவேடக்காரர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் மனிதர்கள் காணும்படி ஜெபஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள். 6#6:6 காணப்படாதிருக்கிற – கிரேக்க மொழியில் இந்த சொல்லை வெளிப்படாத என்றும் மொழிபெயர்க்கலாம்ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்போது நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு தக்க வெகுமதியளிப்பார். 7நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப் போல் அதிக வார்த்தைகளைப் பேசாதிருங்கள். ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் பொருட்டு, தங்கள் மன்றாடல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். 8நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்பதற்கு முன்பே, உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார்.
9“ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டியவிதம் இதுவே:
“ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே,
உமது பெயர் பரிசுத்தப்படுவதாக.
10உமது அரசு வருவதாக.
உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல்
பூமியிலும் செய்யப்படுவதாக.
11எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்.
12எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை#6:12 குற்றம் செய்தவர்களை – கிரேக்க மொழியில் கடனாளிகள் நாங்கள் மன்னிப்பது போல்,
எங்கள் குற்றங்களை#6:12 குற்றங்களை – கிரேக்க மொழியில் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13எங்களைச் சோதனைக்குட்படப்#6:13 சோதனைக்குட்பட அல்லது பரீட்சைக்குள் பண்ணாமல் தீமையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும்.
அரசும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.’#6:13 சில மொழிபெயர்ப்பில் அரசும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென் என்ற பகுதி இல்லை
14ஏனெனில், மனிதர்கள் பாவம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோக பிதாவும் உங்களை மன்னிப்பார். 15ஆனால் மனிதருடைய பாவங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காதுவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்க மாட்டார்.
உபவாசம்
16“நீங்கள் உபவாசிக்கும்போது, வெளிவேடக்காரர் செய்வது போல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகத், தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள். 17ஆனால், நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தைக் கழுவுங்கள். 18அப்போது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாமல் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; ஆகையால் மறைவில் செய்பவற்றை காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
பரலோகத்தில் செல்வங்கள்
19“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் புகுந்து திருடிச் செல்வார்கள். 20ஆகவே உங்களுக்காகச் செல்வங்களை பரலோகத்திலே சேர்த்து வையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடர் புகுந்து திருடிச் செல்லவும் மாட்டார்கள். 21உங்கள் செல்வம் எங்கே இருக்கின்றதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
22“கண்தான் உடலின் விளக்கு. உங்கள் கண் நல்லதாய் இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாய் இருக்கும். 23ஆனால் உங்கள் கண் கெட்டுப்போய் இருந்தால், உங்கள் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உங்களுக்குள் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!
24“ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்கு பணி செய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து இன்னொருவனில் அன்பு செலுத்துவான் அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் பணி செய்ய முடியாது.
கவலை வேண்டாம்
25“ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், எதை உண்போம் எதைக் குடிப்போம் என்று உங்கள் வாழ்வைக் குறித்தும், எதை அணிவோம் என்று உங்கள் உடலைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் மேலானவை. 26ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படியிருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா? 27கவலைப்படுவதால், உங்களில் எவனாவது தன் வாழ்நாளுடன் ஒரு மணி நேரத்தைக்#6:27 ஒரு மணி நேரத்தை அல்லது ஒரு முழத்தை கூட்டுவான் கூட்டிக்கொள்ள முடியுமா?
28“உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்பதுமில்லை; 29ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப் போல் உடை அணிந்ததில்லை. 30இன்றைக்கு இருந்து, நாளை நெருப்பில் எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே இறைவன் இவ்விதம் அணிவித்தால், விசுவாசக் குறைவுள்ளவர்களே, அவர் உங்களுக்கு அதிலும் மேலாக அணிவிப்பது நிச்சயம் அல்லவா? 31எனவே, ‘எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்?’ என்று கவலைப்பட வேண்டாம். 32ஏனெனில் இறைவனை அறியாதவர்கள், இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பரலோக பிதாவோ, இவையெல்லாம் உங்களுக்கு அவசியம் என்று அறிந்திருக்கிறார். 33எனவே முதலாவதாக அவருடைய அரசையும், அவரது நீதியையும் தேடுங்கள், அப்போது இவைகளும் உங்களுக்கு சேர்த்துக் கொடுக்கப்படும். 34நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைகொள்ள வேண்டாம். ஏனெனில் நாளைய தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும் அந்தந்த நாளுக்குரிய பிரச்சினைகளே போதுமானவை.

Nke Ahọpụtara Ugbu A:

மத்தேயு 6: TRV

Mee ka ọ bụrụ isi

Kesaa

Mapịa

None

Ịchọrọ ka echekwaara gị ihe ndị gasị ị mere ka ha pụta ìhè ná ngwaọrụ gị niile? Debanye aha gị ma ọ bụ mee mbanye