லூக்கா 16
16
தந்திரமுள்ள நிர்வாகி
1இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “செல்வந்தன் ஒருவனுக்கு ஒரு நிர்வாகி இருந்தான். தன் எஜமானின் உடைமைகளையெல்லாம் அந்த நிர்வாகி வீணடிப்பதாக அவன்மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2எனவே அந்த செல்வந்தன் அவனை அழைத்து, ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்க முடியாது, எனவே நீ வந்து உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்து விடு’ என்றான்.
3“அதைக் கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப் போகின்றாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பலமில்லை. பிச்சை கேட்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கின்றது. 4இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
5“ஆகவே, அவன் தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வந்தவர்களில் முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
6“அதற்கு அவன், ‘நூறு கொள்கலன்#16:6 நூறு கொள்கலன் – மூலமொழியிலே 100 பாத். இது சுமார் 3,000 லீட்டருக்கு சமம். ஒலிவ எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான்.
“அந்த நிர்வாகி அவனிடம், ‘விரைவாக உட்கார்ந்து, உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதில் ஐம்பது என்று எழுதிக்கொள்’ என்றான்.
7“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான்.
“ ‘ஆயிரம் மூடை#16:7 ஆயிரம் மூடை – மூலமொழியிலே 100 கோர். இது சுமார் 30,000 கிலோவுக்குச் சமம். கோதுமை’ என்று அவன் பதிலளித்தான்.
“அப்போது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
8“நேர்மையற்ற இந்த நிர்வாகி, இப்படிச் சாதுரியமாகச் செயல்பட்டதை அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கின்றவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கின்றார்கள். 9நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அவை இல்லாமல் போகும்போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள்.
10“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் நேர்மையற்றவனாய் இருக்கின்றவன், பெரியவற்றிலும் நேர்மையற்றவனாய் இருப்பான். 11எனவே இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில் நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மையான செல்வத்தை உங்கள் கையில் கொடுப்பவர் யார்? 12இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், தன் சொத்தை உங்களுக்குச் சொந்தமாய் கொடுப்பவர் யார்?
13“எந்த வேலைக்காரனாலும், இரண்டு எஜமான்களுக்கு பணி செய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவன் மீது அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் பணி செய்ய முடியாது” என்றார்.
14பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர்கள் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள். 15அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில் உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ உங்கள் இருதயங்களை அறிவார். மனிதருடைய பார்வையில் உயர்வாய் மதிக்கப்படுவது, இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கும்.
மேலதிகமான போதனைகள்
16“நீதிச்சட்டமும் இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவானுடைய காலம் வரை மட்டுமே; அதுமுதல், இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது, ஆகவே அனைவரும் தீவிரமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள். 17வானமும் பூமியும் மறைந்து போனாலும், நீதிச்சட்டத்தில் இருக்கின்ற எழுத்தின் ஒரு சிறிய புள்ளிகூட மறைந்து போகாது.
18“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், தகாத உறவுகொள்கின்றான். விவாகரத்துச் செய்யப்பட்ட ஒரு பெண்ணை எவனாவது திருமணம் செய்தால், அவனும் தகாத உறவுகொள்கின்றான்.
செல்வந்தனும் லாசருவும்
19“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான#16:19 கருஞ்சிவப்பும் மென்பட்டுமான என்பது விலையுயர்ந்த உடை உடை அணிந்து, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். 20அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய், 21பணக்காரனின் மேசையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களும் வந்து அவன் புண்களை நக்கின.
22“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்து போனான். இறைதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போய், ஆபிரகாமின் அருகே#16:22 ஆபிரகாமின் அருகே – மூலமொழியிலே ஆபிரகாமின் மடி. சிலர் இதை பரலோக விருந்து என்றும் அர்த்தப்படுத்துகிறார்கள் உட்கார வைத்தார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம் பண்ணப்பட்டான். 23இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து#16:23 இறந்தவர்கள் இருக்கும் இடத்திலிருந்து – கிரேக்க மொழியில் ஹேதீஸ் என்றுள்ளது. சிலர் இதை, பாதாளம் என்று அர்த்தப்படுத்துகிறார்கள் அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில், மேலே நோக்கிப் பார்த்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவருடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். 24எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவரை அழைத்து, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப் பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
25“அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலமானவற்றை அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ கஷ்டங்களை அனுபவித்தான். இப்போது அவன் இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய். 26இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்து வர விரும்புகிறவர்களால் அப்படி வர முடியாது, அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் ஒருவராலும் முடியாது’ என்றார்.
27“அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும். 28ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவன் போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
29“அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவைகள் அவர்களிடம் உள்ளன; அவர்கள் அவற்றைக் கேட்டு கீழ்ப்படியட்டும்’ என்றார்.
30“அதற்கு அவன், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால் அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
31“அப்போது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் சொன்னதைக் கேட்பதற்கு அவர்கள் மனதற்றவர்களாக இருந்தால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும்கூட, அவர்கள் நம்ப மாட்டார்கள்’ என்று சொன்னார்.”
Pilihan Saat Ini:
லூக்கா 16: TRV
Sorotan
Berbagi
Salin
Ingin menyimpan sorotan di semua perangkat Anda? Daftar atau masuk
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.