அப்போஸ்தலருடைய நடபடிகள் 3

3
கால் ஊனமுற்றவனைப் பேதுரு குணமாக்குதல்
1ஒரு நாள் பேதுருவும் யோவானும் மன்றாடுதலுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நேரம் பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. 2அங்கே சிலர், பிறப்பிலேயே கால் ஊனமுற்ற ஒரு மனிதனை அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகின்றவர்களிடம், பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். 3பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவர்களிடம் பணம் கேட்டான். 4பேதுரு அவனை உற்று நோக்கிப் பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். 5அப்போது அந்த மனிதன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
6அப்போது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். 7பின்பு அவனது வலது கையைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பலமடைந்தன. 8அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன்பின் அவன் நடந்தும் துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குச் சென்றான். 9அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, 10இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசல் அருகே இருந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக் குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.
மக்களிடம் பேதுரு பேசுதல்
11அவன் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கையில், மக்கள் எல்லோரும் வியப்படைந்தவர்களாய், சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடி வந்தார்கள். 12இதைப் பேதுரு கண்டபோது, அவர்களிடம், “இஸ்ரயேல் மனிதரே! நீங்கள் ஏன் இதைக் கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறைபக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே! அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கின்றீர்கள்? 13ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்த போதிலும், நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி கையளித்து, பிலாத்துவின் முன்பாக அவரை நிராகரித்தீர்கள். 14பரிசுத்தரும், நீதிமானுமாகிய அவரை நீங்கள் நிராகரித்து, மாறாக ஒரு கொலைகாரனை உங்களுக்காக விடுதலை செய்யும்படி நீங்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டீர்கள். 15வாழ்வின் அதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கின்றோம். 16இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் அறிந்த இந்த மனிதன், நீங்கள் காண்கின்றபடி பலமடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும், அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே, நீங்கள் அனைவரும் காண்கின்றபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
17“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும், உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். 18ஆனாலும், தமது மேசியா துன்பங்களை அனுபவிப்பார் என அனைத்து இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் முன்னறிவித்ததை, அவர் இவ்விதமாகவே நிறைவேற்றினார். 19ஆகவே, மனந்திரும்பியவர்களாக இறைவனிடம் திரும்புங்கள். அப்போது உங்கள் பாவங்கள் கழுவப்படும், நீங்கள் புத்துணர்வடையும் காலங்கள் கர்த்தரிடமிருந்து உங்களுக்கு வரும். 20அவர் உங்களுக்காக ஏற்படுத்திய மேசியாவாகிய இயேசுவையும் உங்களிடம் அனுப்புவார். 21இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர் மூலமாக, வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளித்தபடி, அவர் எல்லாவற்றையும் மீண்டும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை மேசியாவாகிய இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். 22ஏனெனில் ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு இறைவாக்கினரை உங்களுக்காக உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார். அவர் சொல்வது அனைத்தையும் நீங்கள் கேட்க வேண்டும். 23அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’#3:23 உபா. 18:15,18,19 என்று மோசே சொல்லியிருக்கின்றாரே.
24“சாமுவேல் தொடங்கி, அவருக்குப் பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். 25நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது வழித்தோன்றலின் மூலமாக, பூமியிலுள்ள மக்களினத்தார் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’#3:25 ஆதி. 22:18; 26:4 என்று சொன்னாரே. 26எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி, உங்களை ஆசீர்வதிக்கும்படி, முதன் முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார்” என்றான்.

Sorotan

Berbagi

Salin

None

Ingin menyimpan sorotan di semua perangkat Anda? Daftar atau masuk

Video untuk அப்போஸ்தலருடைய நடபடிகள் 3