ஆதியாகமம் 46
46
தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல்
1எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனைத் தொழுதுகொண்டு, பலிகளும் செலுத்தினான். 2இரவில் தேவன் கனவில் இஸ்ரவேலிடம் பேசினார். தேவன், “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்.
“நான் இங்கே இருக்கிறேன்” என்றான் இஸ்ரவேல்.
3அப்பொழுது அவர், “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். 4உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும்போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.
இஸ்ரவேல் எகிப்துக்குப் போகிறான்
5பிறகு, யாக்கோபு பெயர்செபாவை விட்டு எகிப்துக்குப் பயணம் செய்தான். அவனது பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், அவர்களின் மனைவிமார்களும் எகிப்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பார்வோன் மன்னன் அனுப்பிய வண்டியில் பயணம் செய்தனர். 6தங்கள் ஆடு மாடுகளையும் கானான் பகுதியில் சம்பாதித்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு எகிப்துக்குப் போனார்கள். எனவே இஸ்ரவேல் தன் குடும்பத்தோடும் தன் எல்லாப் பிள்ளைகளோடும் எகிப்திற்குச் சென்றான். 7அவர்களோடு அவனது பிள்ளைகளும் பேரன்களும், பேத்திகளும், இருந்தனர். மொத்த குடும்பமும் அவனோடு எகிப்தை அடைந்தது.
யாக்கோபின் குடும்பம்
8எகிப்துக்கு இஸ்ரவேலோடு சென்ற அவனது குமாரர்களின் பெயர்களும் குடும்பத்தின் பெயர்களும் பின்வருமாறு:
ரூபன் முதல் குமாரன். 9ரூபனுக்கு ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகிய குமாரர்கள் இருந்தனர்.
10சிமியோனுக்கு எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் குமாரனான சவுல் ஆகிய பிள்ளைகள் இருந்தனர்.
11கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் பிள்ளைகள்.
12ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா ஆகியோர் யூதாவின் பிள்ளைகள். (ஏர் மற்றும் ஓனான் கானானில் இருக்கும்போதே மரணமடைந்தனர்) எஸ்ரோன், ஆமூல் இருவரும் பாரேசுடைய குமாரர்.
13தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள் இசக்காரின் பிள்ளைகள்.
14செரேத், ஏலோன், யக்லேல் ஆகியோர் செபுலோனுடைய பிள்ளைகள்.
15யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த பிள்ளைகள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர். அவள் இக்குழந்தைகளை பதான் ஆராமில் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்ற குமாரத்தியும் உண்டு. மொத்தம் 33 பேர்கள் இருந்தனர்.
16காத்துக்கு சிபியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி எனும் பிள்ளைகள் இருந்தனர்.
17ஆசேருக்கு, இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா எனும் பிள்ளைகள் இருந்தனர். இவர்களுக்கு செராக்கு எனும் சகோதரி இருந்தாள். பெரீயாவுக்கு ஏபேர், மல்கியேல் என்ற பிள்ளைகள் இருந்தனர்.
18இவர்கள் அனைவரும் யாக்கோபின் மனைவியான லேயாளின் வேலைக்காரப் பெண் சில்பாவுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் மொத்தம் 16 பேர்.
19யாக்கோபின் மனைவியான ராகேலுக்கு இரண்டு பிள்ளைகள், யோசேப்பும் பென்ய மீனும். பென்யமீன் யாக்கோபோடு இருந்தான். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.
20எகிப்தில் யோசேப்புக்கு இரண்டு குமாரர்கள். அவர்கள் மனாசேயும் எப்பிராயீமும். அவன் மனைவி ஆஸ்நாத், ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திப்பிராவின் குமாரத்தி.
21பென்யமீனுக்கு பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்னும் பிள்ளைகள்.
22இவர்கள் அனைவரும் யாக்கோபிற்கு ராகேல் மூலம் வந்தவர்கள். மொத்தம் 14 பேர்.
23தாணின் குமாரன் உசீம்.
24நப்தலியின் குமாரர்களான யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
25இவர்கள் யாக்கோபிற்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள். (பில்காள் ராகேலின் வேலைக்காரி.) மொத்தம் ஏழு பேர்.
26ஆக மொத்தம் யாக்கோபு குடும்பத்தின் நேர் சந்ததியார் 66 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் எகிப்துக்குச் சென்றார்கள். இதில் யாக்கோபு மருமகள்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. 27யோசேப்புக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்கள் எகிப்திலேயே பிறந்தவர்கள். எனவே ஒட்டுமொத்தமாக 70 பேர் யாக்கோபு குடும்பத்தில் இருந்தனர்.
இஸ்ரவேல் எகிப்து வந்தடைதல்
28முதலில் யாக்கோபு யூதாவை யோசேப்போடு பேச அனுப்பினான். யூதா யோசேப்பிடம் போய் அவனை கோசேனில் பார்த்தான். பிறகு யாக்கோபும் மற்றவர்களும் அவனோடு போனார்கள். 29யோசேப்பு தன் தந்தை வருவதை அறிந்து தன் தேரைத் தயார் செய்து அவரை எதிர்கொண்டழைக்கப் போனான். அவன் தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு கட்டிப்பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.
30இஸ்ரவேல் யோசேப்பிடம், “இப்போது நான் சமாதானமாக மரிப்பேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே” என்றான்.
31யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும், “நான் இப்போது போய் பார்வோன் மன்னரிடம் நீங்கள் இங்கே இருப்பதைப்பற்றிக் கூறுவேன். அவரிடம், ‘என் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். 32அவர்கள் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் ஆடு மாடுகள் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்பேன். 33அவர் உங்களை அழைத்து ‘நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், 34அவரிடம் நீங்கள் ‘நாங்கள் மேய்ப்பர்கள், எங்கள் வாழ்க்கை முழுவதும் மேய்ப்பது தான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான்’ என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்பமாட்டார்கள். எனவே நீங்கள் இங்கே கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றான்.
Pilihan Saat Ini:
ஆதியாகமம் 46: TAERV
Sorotan
Berbagi
Salin

Ingin menyimpan sorotan di semua perangkat Anda? Daftar atau masuk
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International