ஆதியாகமம் 20

20
ஆபிரகாம் கேராருக்குப் போகிறான்
1ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். 2அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான். அபிமெலேக்கு கேராரின் ராஜா. அவன் சாராளை மிகவும் விரும்பினான். எனவே, வேலைக்காரர்களை அனுப்பி அவளைக் கொண்டு வருமாறு சொன்னான். 3ஆனால் இரவில் தேவன் அபிமெலேக்கின் கனவிலே பேசி, “நீ மரித்து போவாய். நீ கைப்பற்றிய பெண் திருமணமானவள்” என்றார்.
4ஆகையால் அபிமெலேக்கு சாராளைத் தொடவில்லை. அவன் தேவனிடம், “கர்த்தாவே! நான் குற்றமுடையவன் அல்ல. ஒன்றும் தெரியாத அப்பாவியை நீர் கொல்வீரா? 5ஆபிரகாமே என்னிடம், ‘இவள் என் சகோதரி’ என்று சொன்னானே! சாராளும் ஆபிரகாமை ‘இவர் என் சகோதரன்’ என்று கூறிவிட்டாள். நான் அப்பாவி. நான் வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை” என்றான்.
6தேவன் அவனிடம், “நீ என்ன மனநிலையில் இதைச் செய்தாய் என்று எனக்குத் தெரியும். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. நீ எனக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி நான் உன்னைக் காப்பாற்றினேன். நீ அவளைத் தொடாதபடி நானே உன்னைத் தடுத்தேன். 7ஆகவே ஆபிரகாமிடம் அவன் மனைவியைத் திரும்பக் கொடுத்துவிடு. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக ஜெபிப்பான். நீ வாழ்வாய். ஆனால் நீ சாராளை ஆபிரகாமிடம் திரும்பக் கொடுக்காவிட்டால் நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் மரித்துப்போவீர்கள் என்று அறிந்துகொள்” என்றார்.
8எனவே, மறுநாள் அதிகாலையில், அபிமெலேக்கு தன் வேலைக்காரர்களை அழைத்து, நடந்தவைகளைப்பற்றிக் கூறினான், அவர்கள் பயந்தார்கள். 9பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: “நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. 10நீ எதற்காகப் பயந்தாய்? ஏன் இவ்வாறு செய்தாய்” என்று கேட்டான்.
11பிறகு ஆபிரகாம், “நான் பயந்துவிட்டேன், இந்த இடத்தில் உள்ள எவரும் தேவனை மதிக்கமாட்டார்கள் என்று நினைத்தேன். சாராளுக்காக என்னை எவராவது கொன்று விடுவார்களோ என்று நினைத்தேன். 12அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு குமாரத்தி. ஆனால் என் தாய்க்கு மகளல்ல. 13தேவன் என்னை என் தந்தையின் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து என்னைப் பல்வேறு இடங்களில் அலைந்து திரியும்படி செய்திருக்கிறார். அப்போதெல்லாம் சாராளிடம், ‘நாம் எங்கு சென்றாலும் நான் உன் சகோதரன் என்று சொல்லு’ என்று கேட்டுக்கொண்டேன்” என்றான்.
14என்ன நடந்தது என்பதை அபிமெலேக்கு புரிந்துகொண்டான். எனவே சாராளைத் திரும்ப ஆபிரகாமிடம் அனுப்பிவிட்டான். அவளுக்குச் சில ஆடுகளையும் மாடுகளையும் அடிமைகளையும் கொடுத்தான். 15பிறகு, “உன்னைச் சுற்றிலும் பார், இது எனது நிலம், நீ விரும்புகிற எந்த இடத்திலும் வாழலாம்” என்றான்.
16அவன் சாராளிடம், “நான் உன் சகோதரன், ஆபிரகாமிடம் 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தேன். நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவே அவ்வாறு செய்தேன். நான் செய்தது சரியென்று எல்லோருக்கும் தெரியவேண்டும்” என்றான்.
17-18கர்த்தர், சாராளினிமித்தம் அபிமெலேக்கின் குடும்பத்தில் எவருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும்படி செய்திருந்தார். இப்போது ஆபிரகாம் தேவனிடம் வேண்டிக்கொள்ளவே, தேவன் அபிமெலேக்கு, அவன் மனைவி, வேலைக்காரப் பெண்கள் அனைவரையும் குணப்படுத்தினார்.

Sorotan

Berbagi

Salin

None

Ingin menyimpan sorotan di semua perangkat Anda? Daftar atau masuk