ஆதியாகமம் 39
39
யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான்
1யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். 2ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.
3கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். 4அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். 5யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 6ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
யோசேப்பு போத்திபாரின் மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல்
யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். 7கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள்.
8ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். 9என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான்.
10அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். 11ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். 12அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.
13அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். 14அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். 15நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். 16அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, 17அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். 18அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.
19யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். 20ராஜாவினுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான்.
சிறையில் யோசேப்பு
21ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். 22யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். 23அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.
Արդեն Ընտրված.
ஆதியாகமம் 39: TAERV
Ընդգծել
Կիսվել
Պատճենել

Ցանկանու՞մ եք պահպանել ձեր նշումները ձեր բոլոր սարքերում: Գրանցվեք կամ մուտք գործեք
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International