ஆதியாகமம் 33

33
யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல்
1யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள் குழந்தைகளும் ஒரு குழு. ராகேலும் யோசேப்பும் இன்னொரு குழு. இரண்டு வேலைக்காரிகளும் அவர்களின் பிள்ளைகளும் தனித்தனியாக இரண்டு குழுக்கள். 2யாக்கோபு முதலில் வேலைக்காரிகளையும் பிள்ளைகளையும் நிற்க வைத்தான். பின் லேயாளும் அவள் பிள்ளைகளும். கடைசியில் ராகேல் மற்றும் யோசேப்பு இருவரையும் நிற்க வைத்தான்.
3யாக்கோபு ஏசாவிடம் முதலில் போனான். அவன் போகும்போதே ஏழுமுறை தரையில் குனிந்து வணங்கினான்.
4அப்போது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து அவனைத் தழுவிக்கொண்டான். ஏசா யாக்கோபை கைகளால் கழுத்தில் அணைத்துக்கொண்டு முத்தமிட்டான். பின் இருவரும் அழுதனர். 5ஏசா ஏறிட்டுப் பார்த்து பெண்களையும் குழந்தைகளையும் கவனித்தான். “இவர்கள் அனைவரும் யார்?” எனக் கேட்டான்.
யாக்கோபு, “இவர்கள் தேவன் கொடுத்த என் பிள்ளைகள். தேவன் எனக்கு நன்மை செய்திருக்கிறார்” என்றான்.
6பிறகு இரு வேலைக்காரிகளும் குழந்தைகளும் ஏசாவின் அருகில் சென்று அவன் முன் கீழே குனிந்து வணங்கினார்கள். 7பிறகு லேயாளும் அவளது பிள்ளைகளும் போய் பணிந்து வணங்கினார்கள். பின்னர் ராகேலும், யோசேப்பும் ஏசாவின் அருகில் சென்று பணிந்து வணங்கினார்கள்.
8ஏசா அவனிடம், “நான் வரும்போது பார்க்க நேர்ந்த இந்த மனிதர்கள் எல்லாம் யார்? இந்த மிருகங்கள் எல்லாம் எதற்காக?” என்று கேட்டான்.
யாக்கோபு, “என்னை நீர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக இப்பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றான்.
9ஆனால் ஏசாவோ, “எனக்கு நீ பரிசுப் பொருட்கள் கொடுக்க வேண்டிய தேவையில்லை. என்னிடம் போதுமான அளவு இருக்கிறது” என்றான்.
10அதற்கு யாக்கோபு, “இல்லை. நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை நீர் உண்மையில் ஏற்றுக்கொள்வதானால் இப்பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும். உமது முகத்தை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தேவனின் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. என்னை நீர் ஏற்றுக்கொண்டதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். 11ஆகையால் நான் கொடுக்கும் பரிசுப் பொருட்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். தேவன் எனக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார். தேவைக்குமேல் என்னிடம் உள்ளது” என்றான். இவ்வாறு யாக்கோபு கெஞ்சியதால் ஏசா பரிசுப் பொருட்களை ஏற்றுக்கொண்டான்.
12ஏசா, “இப்போது உனது பயணத்தைத் தொடரலாம். நான் உனக்கு முன் வருவேன்” என்றான்.
13ஆனால் யாக்கோபோ, “எனது குழந்தைகள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும். எனது மந்தைகளைப்பற்றியும், அவற்றின் இளம் கன்றுகளைப்பற்றியும் நான் கவனமாக இருக்க வேண்டும். நான் அவற்றை ஒரு நாளில் அதிக தூரம் நடக்க வைத்தால் எல்லா விலங்குகளும் மரித்துப்போகும். 14எனவே நீங்கள் போய்க்கொண்டே இருங்கள், நான் மெதுவாகப் பின் தொடர்ந்து வருகிறேன். ஆடுமாடுகளும் மற்ற மிருகங்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நான் மெதுவாக வருகிறேன். என் குழந்தைகள் மிகவும் சோர்ந்து போகாதபடி மெதுவாக வருகிறேன். நான் உங்களை சேயீரில் சந்திப்பேன்” என்றான்.
15எனவே ஏசா, “பிறகு நான் எனது சில மனிதர்களை உனக்கு உதவியாக விட்டுவிட்டுப் போகிறேன்” என்றான்.
ஆனால் யாக்கோபு, “உம் அன்புக்காக நன்றி, ஆனால் அது தேவையில்லை” என்றான். 16எனவே அன்று ஏசா சேயீருக்குப் பயணம் புறப்பட்டான். 17ஆனால் யாக்கோபோ சுக்கோத்திற்குப் பயணம் செய்தான். அங்கே அவன் தனக்கென்று வீடு கட்டிக்கொண்டதுடன், மிருகங்களுக்கும் தொழுவம் அமைத்துக்கொண்டான். எனவே அந்த இடம் சுக்கோத் என்று பெயர் பெற்றது.
18யாக்கோபு தனது பயணத்தைச் சுகமாக பதான் அராமிலிருந்து கானான் நாட்டிலிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு அருகில் முடித்துவிட்டான். நகரத்திற்கு அருகிலுள்ள வயலில் தன் கூடாரத்தைப் போட்டான். 19யாக்கோபு அந்த வயலைச் சீகேமின் தந்தையான ஏமோரிடமிருந்து விலைக்கு வாங்கினான். அவன் அதற்கு 100 வெள்ளிக் காசுகள் கொடுத்தான். 20யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு “ஏல் எல்லோகே இஸ்ரவேல்” என்று பெயரிட்டான்.

Արդեն Ընտրված.

ஆதியாகமம் 33: TAERV

Ընդգծել

Կիսվել

Պատճենել

None

Ցանկանու՞մ եք պահպանել ձեր նշումները ձեր բոլոր սարքերում: Գրանցվեք կամ մուտք գործեք