ஆதியாகமம் 2

2
1இவ்வாறு வானமும் பூமியும், அவற்றில் உள்ள எல்லாம் உண்டாக்கப்பட்டு முடிந்தன.
2ஏழாம்நாள் ஆகும்போது இறைவன் தான் செய்துகொண்டிருந்த வேலையை முடித்தார்; ஆதலால் அவர், ஏழாம்நாளில் எல்லா வேலையிலிருந்தும் ஓய்ந்திருந்தார். 3இறைவன் தாம் செய்துமுடித்த படைப்பின் வேலைகள் எல்லாவற்றிலுமிருந்து ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தபடியால், அந்த நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதாமும் ஏவாளும்
4இறைவனாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கியபோது, வானமும் பூமியும் படைக்கப்பட்ட வரலாறு இவைகளே.
5இறைவனாகிய யெகோவா பூமியில் மழையை அனுப்பாதிருந்ததினால், பூமியில் எந்தப் புதரும் இன்னும் காணப்படவுமில்லை, எந்த செடிகளும் இன்னும் முளைத்திருக்கவும் இல்லை; நிலத்தைப் பண்படுத்தவும் யாரும் இருக்கவில்லை. 6ஆனாலும், பூமியிலிருந்து மூடுபனி மேலெழும்பி நிலத்தின் மேற்பரப்பு முழுவதையும் நனைத்தது. 7இறைவனாகிய யெகோவா நிலத்தின் மண்ணினால் மனிதனை உருவாக்கி, அவனுடைய நாசியில் உயிர்மூச்சை ஊதினார்; அப்பொழுது மனிதன் உயிருள்ளவனானான்.
8இறைவனாகிய யெகோவா, கிழக்குத் திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே குடியமர்த்தினார். 9இறைவனாகிய யெகோவா பார்வைக்கு இனியதும் உணவுக்கு ஏற்றதுமான எல்லா வகையான மரங்களையும் அத்தோட்டத்தில் வளரச்செய்தார். தோட்டத்தின் நடுவில் வாழ்வளிக்கும் மரமும் நன்மை தீமையின் அறிவைத் தரும் மரமும் இருந்தன.
10ஏதேனிலிருந்து ஒரு ஆறு ஓடி, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சியது. அங்கிருந்து அது நான்கு ஆறுகளாகப் பிரிந்து ஓடியது. 11முதலாம் ஆற்றின் பெயர் பைசோன்; அது தங்கம் விளையும் தேசமான ஆவிலா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. 12அந்த நாட்டின் தங்கம் மிகத் தரமானது; அங்கே நறுமணமுள்ள சாம்பிராணியும் கோமேதகக் கல்லும் இருந்தன. 13இரண்டாம் ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதின் வழியாகவும் வளைந்து ஓடியது. 14மூன்றாம் ஆற்றின் பெயர் திக்ரீசு என்ற இதெக்கேல். இது அசீரியா நாட்டின் கிழக்குப் பக்கம் ஓடியது. நான்காம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பெயர்.
15இறைவனாகிய யெகோவா, மனிதனைக் கொண்டுபோய், ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் அவனை அங்கு குடியமர்த்தினார். 16பின்பு இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டு, “நீ தோட்டத்திலுள்ள எந்த மரத்திலிருந்தும் சாப்பிடலாம்; 17ஆனால் நீ நன்மை தீமையின் அறிவைத் தரும் மரத்திலிருந்து மட்டும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அதிலிருந்து சாப்பிடும் நாளில் நிச்சயமாய் நீ சாகவே சாவாய்” என்று சொன்னார்.
18பின்பு இறைவனாகிய யெகோவா, “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்குத் தகுந்த ஒரு துணையை உண்டாக்குவேன்” என்றார்.
19அப்பொழுது இறைவனாகிய யெகோவா எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா ஆகாயத்துப் பறவைகளையும் மண்ணிலிருந்து உருவாக்கியிருந்தார். மனிதன் அவற்றுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவர் அவற்றை அவனிடம் கொண்டுவந்தார்; மனிதன் ஒவ்வொரு உயிரினத்தையும் எப்படி அழைத்தானோ அதுவே அதற்குப் பெயராயிற்று. 20இவ்வாறு மனிதன் எல்லா வளர்ப்பு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான்.
ஆனால் ஆதாமுக்கோ தகுந்த துணை இன்னமும் காணப்படவில்லை. 21எனவே இறைவனாகிய யெகோவா மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரையை வரப்பண்ணினார்; அவன் நித்திரையாய் இருந்தபோது, அவர் அவனுடைய விலா எலும்புகளில்#2:21 எலும்புகளில் அல்லது மனிதனின் ஓரப் பக்கத்தில் ஒரு பகுதியை எடுத்தார் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் மூடினார். 22பின்பு இறைவனாகிய யெகோவா, தான் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.
23அப்பொழுது மனிதன் சொன்னான்:
“இவள் என் எலும்பின் எலும்பாகவும்
என் சதையின் சதையாகவும் இருக்கிறாள்;
இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால்,
‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்.”
24இதனாலேயே மனிதன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
25ஆதாமும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வெட்கப்படவில்லை.

های‌لایت

به اشتراک گذاشتن

کپی

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید