YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 29

29
29 அதிகாரம்
1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.
14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.
20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in