YouVersion Logo
Search Icon

எபிரேயர் 3

3
இயேசு மோசேயிலும் பெரியவர்
1ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கின்றவர்களான பரிசுத்த சகோதரர்களே, நமது விசுவாச அறிக்கையின்படி நாம் ஒப்புக்கொள்ளுகின்ற நமது அப்போஸ்தலரும் தலைமை மதகுருவுமாகிய இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். 2இறைவனுடைய வீட்டார் அனைவருக்கும் மோசே உண்மையுள்ளவராக இருந்ததைப் போலவே, இயேசு தன்னை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். 3ஒரு வீட்டைக் கட்டுகின்றவன் அந்த வீட்டைப் பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பது போலவே, இயேசுவும் மோசேயைப் பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவராய் இருக்கின்றார். 4ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவராலே கட்டப்படுகிறது. ஆனால் எல்லாவற்றையும் கட்டுகின்றவரோ இறைவனே. 5“இறைவனுடைய வீட்டார் எல்லோருக்கும் மோசே ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து,”#3:5 எண். 12:7 இனி வரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகின்றவற்றிற்கு சாட்சி கொடுக்கின்றவராகவே இருந்தார். 6ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டுக்கு பொறுப்பான உண்மையுள்ள மகனாய் இருக்கின்றார். நமது மன தைரியத்தையும், நாம் பெருமிதம்கொள்ளும் எதிர்பார்ப்பையும் நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு இருப்போமானால், நாமே இறைவனுடைய வீட்டாராயிருப்போம்.
அவிசுவாசத்துக்கு எதிரான எச்சரிக்கை
7ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சொல்கின்றபடி,
“இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
8நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்.
பாலைநிலத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில்,
கலகம் செய்தது போல் நடந்துகொள்ள வேண்டாம்.
9அங்கே உங்கள் முற்பிதாக்கள் என் பொறுமையைச் சோதித்து,
நான் நாற்பது ஆண்டுகளாக செய்தவைகளைக் கண்டார்கள்.
10அதனாலேயே நான் அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன். நான் அவர்களைக் குறித்து,
‘இவர்கள் எப்போதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகின்றார்கள்.
இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ ”
என்று சொன்னேன்.
11“ஆகவே ‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’
என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டு அறிவித்தேன்.”#3:11 சங். 95:7-11
12ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவனும் வாழும் இறைவனிடமிருந்து வழிவிலகிச் செல்கின்றதான அவிசுவாசமுள்ள பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 13பாவத்தின் வஞ்சனையினால் உங்களில் எவரும் மனக் கடினம் அடையாது இருக்கும்படி, “இன்று” என்று நீங்கள் சொல்லும்வரை, ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள். 14நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவு வரை உறுதியாய் பற்றிக்கொண்டால்தான் நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.
15“இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால்,
நீங்கள் கலகம் செய்த சம்பவத்தின்போது நடந்துகொண்டதைப் போல்
உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்”#3:15 சங். 95:7,8
என்று சொல்லப்பட்டிருக்கின்றபடியே.
16இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும் மோசேயினால் எகிப்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்லவா? 17இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைநிலத்தில் மரணித்து விழுந்து கிடந்தனவே. 18இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் என்று யாரைக் குறித்து இறைவன் ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா? 19ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கின்றோம்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in