YouVersion Logo
Search Icon

எபிரேயர் 1

1
இறைவனின் கடைசி வார்த்தை: அவருடைய மகன்
1இறைவன், முற்காலத்தில் பல முறை பல்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார். 2ஆனால், நம்மோடு இந்தக் கடைசி நாட்களில் அவர் தமது மகன் மூலமாகவே பேசியுள்ளார். இவரையே இறைவன் எல்லாவற்றிற்கும் வாரிசாக#1:2 வாரிசாக – சொத்துரிமை உடையவர் என்பது இதன் அர்த்தம். நியமித்திருக்கிறார். இவர் மூலமாகவே இறைவன் அண்ட சராசரங்களையும் படைத்தார். 3இறைவனுடைய மகனே அவருடைய மகிமையின் ஒளியாயும், அவருடைய இறை இயல்பின் மிகத் துல்லியமான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றார். இவரே தம்முடைய வல்லமையான வார்த்தையினாலே எல்லாவற்றையும் பராமரித்துத் தாங்குகிறார். இவர் பாவங்களுக்கான சுத்திகரிப்பை ஏற்படுத்தி முடித்த பின்பு, பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய வலது பக்கத்தில்#1:3 வலது பக்கத்தில் என்பது அதிகாரத்தின் இடம் உட்கார்ந்தார். 4இறைதூதர்களின் பெயர்களைவிட, தமது உரிமைச் சொத்தாக இவர் பெற்றுக்கொண்ட பெயர் மேன்மையானதாக இருக்கின்றது. அதற்கேற்ப, தூதர்களைவிட இவர் மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
மகன் இறைதூதர்களிலும் மேன்மையானவர்
5ஏனெனில் இறைவன் தூதர்களில் யாரையாவது பார்த்து,
“நீர் என்னுடைய மகன்,
இன்று நான் உமக்குத் தந்தையானேன்”#1:5 சங். 2:7
என்று எப்பொழுதாவது சொல்லியிருக்கின்றாரா? அல்லது,
“நான் இவருடைய தந்தையாயிருப்பேன்,
அவர் என்னுடைய மகனாயிருப்பார்”#1:5 2 சாமு. 7:14; 1 நாளா. 17:13
என்று சொல்லியிருக்கின்றாரா? 6மேலும் இறைவன் தம்முடைய முதற்பேறானவரை உலகத்திற்குள் கொண்டுவந்தபோது,
“இறைவனுடைய தூதர்கள் எல்லோரும் அவரை வழிபட வேண்டும்”#1:6 உபா. 32:43
என்றார். 7ஆனால் இறைதூதர்களைக் குறித்து பேசும்போது இறைவன் சொல்கின்றதாவது,
“அவர் தம்முடைய இறைதூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய
ஊழியர்களை தீச் சுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”#1:7 சங். 104:4
8ஆனால் தம்முடைய மகனைக் குறித்தோ அவர் சொல்கின்றதாவது,
“இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்.
நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.
9நீர் நீதியை விரும்பி, அநீதியை வெறுத்தீர்.
ஆகையால் இறைவனே, உமது இறைவனே உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து,
உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்தி வைத்தார்.”#1:9 சங். 45:6,7
10இறைவன் மேலும் சொன்னதாவது,
“ஆண்டவரே, நீர் ஆதியிலே பூமிக்கு அத்திவாரங்களை அமைத்தீர்,
வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன.
11அவையோ அழிந்து போகும், ஆனால் நீரோ நிலைத்திருப்பீர்.
அவையெல்லாம் ஆடையைப் போல பழையதாய்ப் போகும்.
12அவற்றை ஒரு மேலாடையைப் போல் நீர் சுருட்டி வைப்பீர்,
அவை ஒரு ஆடையைப் போல் மாற்றப்படும்,
ஆனால் நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர்.
உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிவுறாது.”#1:12 சங். 102:25-27
13இறைதூதர்களில் யாரைப் பார்த்து இறைவன்,
“நான் உமது பகைவரை
உமது கால்களுக்கு கீழே உமது அரியணையின் பாதபடி ஆக்கும்வரை
நீர் என் வலது பக்கத்தில் அமர்ந்திரும்”#1:13 சங். 110:1
என்று சொல்லியிருக்கின்றார்?
14இறைதூதர்களெல்லோரும் சேவை செய்யும் ஆவிகள் அல்லவா? இரட்சிப்பை உரிமையாக்கிக்கொள்ளப் போகின்றவர்களுக்குப் பணிவிடை செய்யும்படி அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in