YouVersion Logo
Search Icon

கொலோசேயர் 1

1
1இறைவனுடைய விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும், பவுலும் நமது சகோதரன் தீமோத்தேயுவும்,
2கொலோசே பட்டணத்திலே கிறிஸ்துவில் இணைந்துள்ள பரிசுத்தவான்களுக்கும், உண்மை உள்ளவர்களாயிருக்கும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும் எழுதுவதாவது:
நம்முடைய பிதாவாகிய இறைவனால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதலும் மன்றாடுதலும்
3உங்களுக்காக நாங்கள் மன்றாடும் போதெல்லாம், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்கின்றோம். 4ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லோரிலும் நீங்கள் கொண்டுள்ள அன்பையும் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். 5இந்த விசுவாசமும் அன்பும் உங்களுக்கென பரலோகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதென நீங்கள் எதிர்பார்த்திருப்பதில் இருந்தே வருகின்றன. இந்த எதிர்பார்ப்பைப் பற்றி, உண்மையின் வார்த்தையாகிய நற்செய்தியின் ஊடாக நீங்கள் முன்னரே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 6அந்த நற்செய்தியானது உங்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் அந்த நற்செய்தியைக் கேட்டு, இறைவனுடைய கிருபையை உண்மையாக விளங்கிக்கொண்ட நாளிலிருந்து, அது உங்களிடையே கனி கொடுத்து வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அதுபோலவே, இந்த நற்செய்தி உலகம் முழுவதும் பலன் கொடுத்து வருகின்றது. 7இந்த நற்செய்தியை எங்கள் அன்புக்குரிய சக ஊழியனான எப்பாப்பிராத்துவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். அவன் எங்கள் சார்பாக சேவை செய்யும் கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியன். 8பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் பெற்றிருக்கும் அன்பைக் குறித்தும் அவனே எங்களுக்குத் தெரிவித்தான்.
9எனவே உங்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக தவறாமல் மன்றாடி வருகின்றோம். ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவால் நிரப்பப்பட வேண்டும் என்றே உங்களுக்காக இறைவனிடம் கேட்கின்றோம். 10மேலும், நீங்கள் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து, எல்லாவிதத்திலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். பல நற்செயல்களின் ஊடாக கனி கொடுத்து, இறைவனைப் பற்றிய அறிவில் வளர்ச்சி அடைந்து, 11அவருடைய மகிமையான ஆற்றலிலிருந்து வரும் எல்லா வல்லமையினாலும் நீங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலமாக நீங்கள் மிகுந்த சகிப்புத் தன்மையும், பொறுமையும் உடையவர்களாய் இருந்து, 12ஒளியில்#1:12 ஒளியில் – ஒளிமயமான பரலோக அரசில் என்று பொருள். இறைவனுடைய மக்களுக்குக் கிடைக்கும் உரிமைச் சொத்தில் நீங்களும் பங்கு பெறும்படி உங்களைத் தகுதி உடையவர்களாக்கிய பிதாவுக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துகிறவர்களாய் இருங்கள். 13ஏனெனில், அவரே நம்மை இருளின் ஆட்சிக்குட்பட்ட அதிகாரத்திலிருந்து விடுவித்து, அவருடைய அன்பான மகனின்#1:13 மகனின் என்பது கிறிஸ்துவின் அரசுக்குள் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். 14அந்த மகனாலேயே நாம் மீட்பை, அதாவது பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம்.
கிறிஸ்துவின் அதிமேன்மையான நிலை
15கண்களால் பார்க்க முடியாத இறைவனின் சாயலாய் இருப்பவர் கிறிஸ்துவே. அவரே எல்லாப் படைப்புகளுக்கும் மேலான முதற் பேறானவர். 16இவர் மூலமே அனைத்தும் படைக்கப்பட்டன; வானத்திலும் பூமியிலும் உள்ள#1:16 வானத்திலும் பூமியிலும் உள்ள – இறைவனின் எல்லா படைப்புகளும் என்று பொருள் கண்ணுக்கு தென்படுகின்றவைகளோ, தென்படாதவைகளோ, அரசாட்சிகளோ,#1:16 அரசாட்சிகளோ – கிரேக்க மொழியில், அரியணைகளோ வல்லமைகளோ, ஆளுகின்றவர்களோ, அதிகாரங்களோ அனைத்துமே இவராலே இவருக்கென்றே படைக்கப்பட்டன. 17இவரே அனைத்துக்கும் முன்பாக இருக்கின்றவர், இவரிலேயே அனைத்தும் ஒருங்கிணைந்து நிலைநிற்கின்றன. 18இவரே திருச்சபையாகிய உடலுக்குத் தலையானவர். எனவே, அனைத்திலும் முதல் மேன்மை அடையும்படி, இவரே ஆரம்பமும் இறந்தவர்களிலிருந்து எழுந்த முதற் பேறானவருமாய்#1:18 1 கொரி. 15:23 முதற் பேறானவருமாய் – முதற் பலனுமாய் இருக்கின்றவர் என்றும் அர்த்தம்கொள்ளலாம். இருக்கின்றார். 19ஏனெனில் இறைவன், தமது முழுமை அனைத்தும் கிறிஸ்துவில் பூரணமாய் தங்கியிருப்பதை விரும்பினார். 20கிறிஸ்துவின் ஊடாக பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் தம்மோடு ஒப்புரவாக்கி, அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்க இறைவன் விருப்பம் கொண்டார்.
21நீங்களோ முன்பு இறைவனுடன் தொடர்பற்ற அந்நியராய் இருந்து, உங்கள் தீமையான நடத்தையினால் உங்கள் சிந்தையில் அவரைப் பகைத்து வாழ்ந்தீர்கள். 22ஆனால் இப்பொழுதோ அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் கறைபடாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் தமக்கு முன்பாக நிறுத்துவதற்காக, கிறிஸ்துவின் மரணத்தினால் அவரின் மனித உடலிலே உங்களை ஒப்புரவாக்கினார். 23ஆகவே, நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல எதிர்பார்ப்புகளில் இருந்து சற்றும் விலகாமல் உங்கள் விசுவாசத்தில் உறுதியுடன் வேரூன்றி தொடர்ந்து நிலைத்திருங்கள். நீங்கள் கேட்ட இந்த நற்செய்தி, வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பவுலாகிய நான் அதை அறிவிக்கும் ஊழியனாய் இருக்கின்றேன்.
திருச்சபைக்கான பவுலின் பணி
24உங்களுக்காக நான் படும் துன்பங்களைக் குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறேன். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்காக அவர் அடைந்த துன்பங்களில் நானும் பங்குபற்றி, குறைவை நிறைவாக்கும் பொருட்டு எனது உடலிலும் வேதனைகளை அனுபவிக்கிறேன். 25இறைவனுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாக அறிவிக்கும் பொறுப்புடையவனாய் இறைவன் என்னை நியமித்ததால் நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன். 26இறைவனுடைய அந்தச் செய்தி, மனித அறிவுக்கு எட்டாத ஒன்றாக காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 27இந்த மறைபொருளின் மகிமை நிறைந்த செல்வம் எப்படிப்பட்டது என்பதை யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் வெளிப்படுத்துகிறார். இதைத் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்த அவர் தீர்மானித்தார். பரலோக மகிமையில் பங்குகொள்வோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை, உங்களுக்குள் வாழும் கிறிஸ்துவே உறுதி செய்கின்றார்.
28அந்த கிறிஸ்துவையே நாம் அறிவித்து, ஒவ்வொருவரையும் அவருக்குள் முழுமை பெற்றவர்களாக நிறுத்துவதற்காக அவர்கள் எல்லோருக்கும் தவறுகளை அறிவுறுத்தி, வழிமுறைகளைக் கற்பித்து, எல்லா ஞானத்தோடும் கற்பித்து வருகின்றோம். 29இதற்காகவே எனக்குள் செயற்படுகின்ற கிறிஸ்துவின்#1:29 கிறிஸ்துவின் – கிரேக்க மொழியில் அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடன், கடுமையாக உழைத்துப் போராடுகிறேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in