அப்போஸ்தலருடைய நடபடிகள் 4
4
நியாயசபையின் முன் பேதுருவும் யோவானும்
1பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கையில், மதகுருக்களும் ஆலயக் காவலர் தலைவனும் சதுசேயரும் வந்தார்கள். 2இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று, அப்போஸ்தலர்கள் மக்களுக்கு போதித்து பிரசித்தப்படுத்தியதன் காரணமாக, அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள். 3அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள். 4ஆனால், அவர்களுடைய வார்த்தையைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம் பேராய் இருந்தார்கள்.
5மறுநாளிலே ஆளுநர்களும், சமூகத் தலைவர்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள். 6தலைமை மதகுருவாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன், பிரதம மதகுருவின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள். 7அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்கு முன் கொண்டுவரும்படி செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
8அப்போது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம், “ஆளுநர்களே, சமூகத் தலைவர்களே, 9கால் ஊனமுற்ற ஒருவனுக்கு இரக்கம் காட்டிய ஒரு செயல் குறித்தும், அவன் எப்படிக் குணமானான் என்று விளக்கம் தரவும் இன்று நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால், 10நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறிய வேண்டியது இதுவே: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரினாலேயே இந்த மனிதன் உங்களுக்கு முன்பாகக் குணமடைந்தவனாய் நிற்கிறான். அவரையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இறைவனோ, அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். 11அப்படிப்பட்டவராகிய இயேசுவே,
“ ‘கட்டடம் கட்டுகின்றவர்களாகிய உங்களால் நிராகரிக்கப்பட்ட கல்,
அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’#4:11 சங். 118:22
12இயேசுவிலேயன்றி, வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படியாக, வானத்தின் கீழ் மனிதரிடையே அவருடைய பெயரன்றி, வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான்.
13பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் அதிக கல்வி கற்காத சாதாரண மனிதர்கள் என்பதையும் தெரிந்து கொண்டபோது, அவர்கள் மலைத்துப் போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 14ஆனால் குணமடைந்த மனிதனும் அங்கு இவர்களுடன் நிற்கின்றதை அவர்கள் கண்டதால் அவர்களால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. 15எனவே, நியாயசபையிலிருந்து பேதுருவையும் யோவானையும் வெளியே போகும்படி உத்தரவிட்ட பின், அவர்கள் இந்த விடயத்தைக் குறித்து ஒருவரோடொருவர் கலந்துரையாடினார்கள்: 16“நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? இவர்கள் ஒரு பெரிய அற்புத அடையாளத்தை செய்துள்ளார்கள் என்பதை எருசலேமில் வாழ்கின்ற எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அதை நாமும் மறுக்க முடியாது. 17ஆனால், இது தொடர்ந்தும் மக்களிடையே பரவாதபடி தடை செய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே இவர்கள் இனிமேல் யாருடனும் பேசக் கூடாது’ என்று நாம் இவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
18எனவே அவர்கள் திரும்பவும் பேதுருவையும் யோவானையும் உள்ளே அழைத்து, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 19ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று நீங்களே நிதானித்துப் பாருங்கள். 20நாங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள்.
21நடந்த அற்புதத்திற்காக மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் திரும்பவும் பயமுறுத்திவிட்டு, பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள். 22ஏனெனில், அற்புதமாய் குணமடைந்த அந்த மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
விசுவாசிகளின் மன்றாடல்
23பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களுடைய குழுவினரிடம்#4:23 தங்களுடைய குழுவினரிடம் – கிரேக்க மொழியில் தம்மைச் சேர்ந்த மக்களிடம் என்றுள்ளது திரும்பிப் போய் தலைமை மதகுருக்களும் சமூகத் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள். 24அவர்கள் இதைக் கேட்டதும் ஒன்றாகத் தம் குரலை உயர்த்தியவர்களாக இறைவனை நோக்கி: “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். 25நீர் பரிசுத்த ஆவியானவர் மூலமாக உமது ஊழியரும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது:
“ ‘இனங்கள் ஏன் கொதித்து எழுகின்றன?
மக்கள் ஏன் வீணாகப் பயனற்ற சூழ்ச்சி செய்கின்றார்கள்?
26பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்.
ஆளுநர்களும்கூட, கர்த்தருக்கு விரோதமாகவும்
அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு
விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’#4:26 சங். 2:1,2
27நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே. 28ஆனாலும், என்ன நடக்க வேண்டுமென உம்முடைய வல்லமையின்படியும் திட்டத்தின்படியும், நீர் முன்னதாகவே தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள். 29இப்போதும் கர்த்தாவே! அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்வீராக; உமது வார்த்தையை அதிக துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடுத்திடுவீராக. 30உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் குணமாக்குவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது வல்லமையை செயற்படுத்துவீராக#4:30 வல்லமையை செயற்படுத்துவீராக – கிரேக்க மொழியில் கரத்தை நீட்டுவீராக என்றுள்ளது” என்று மன்றாடினார்கள்.
31அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையைத் தைரியமாகப் பேசினார்கள்.
சொத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல்
32எல்லா விசுவாசிகளும் இருதயத்திலும் மனதிலும் ஒரே சிந்தனை உடையவர்களாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கோரவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய் பகிர்ந்து கொண்டார்கள். 33ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து, அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்து வந்தார்கள். அவர்கள் எல்லோர் மேலும் மிகுந்த கிருபை இருந்தது. 34அவர்களுக்குள்ளே குறைவுள்ளவர்களென எவரும் இருக்கவில்லை. ஏனெனில் சொந்த நிலங்களையும் வீடுகளையும் கொண்டிருந்தவர்கள், காலத்திற்குக் காலம் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து, 35அப்போஸ்தலர்களின் பாதத்தில்#4:35 பாதத்தில் – நிர்வாகப் பொறுப்பில் என்று அர்த்தம் வைத்துக் கொண்டிருந்தார்கள். அது அவரவர் தேவைக்கு ஏற்றபடி, தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
36சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர்கள் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், ஊக்குவிக்கும் மகன் என்று அர்த்தமாகும். 37இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.