அப்போஸ்தலருடைய நடபடிகள் 16
16
பவுலுடனும் சீலாவுடனும் தீமோத்தேயு சேருதல்
1பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குச் சென்றான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன். 2லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்கள், அவனைக் குறித்து நல்ல அபிப்பிராயம் உடையவர்களாய் இருந்தார்கள். 3பவுல் அந்தப் பயணத்திலே அவனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினான். எனவே அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் எல்லோரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். 4அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பரும் எடுத்த தீர்மானங்களை அங்குள்ளவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். 5இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பலமடைந்து நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.
பவுலின் தரிசனம்
6பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகளைக் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதபடி பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை செய்திருந்தார். 7அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது பித்தினியாவுக்குப் போக முயற்சி செய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை. 8எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து துரோவா பட்டணத்திற்குப் போனார்கள். 9அந்த இரவிலே பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவி செய்யும்” என்று கெஞ்சிக் கேட்டான். 10பவுல் இந்த தரிசனத்தைக் கண்ட பின்பு உடனே நாங்கள் மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
லீதியாளின் மனமாற்றம்
11நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலில் புறப்பட்டு நேரே சாமோத்திராக்கேயை நோக்கிப் போனோம். மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம். 12அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற பிரதேசமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா மாவட்டத்தின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம்.
13ஓய்வுநாளிலே மன்றாடுவதற்கு ஒரு இடம் இருக்குமென்று எதிர்பார்த்து பட்டணத்தின் வாயிலுக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். நாங்கள் அங்கே உட்கார்ந்து அங்கு கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம். 14நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக் கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச் சேர்ந்த அவள் செம்பட்டுத் துணி விற்பனை செய்கின்றவள். அவள் இறைவனை ஆராதிக்கின்றவளாயும் இருந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார். 15அவளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றபின் அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், என்னுடைய வீட்டில் வந்து தங்குங்கள்” என்று சொல்லி எங்களை இணங்க வைத்தாள்.
சிறையில் பவுலும் சீலாவும்
16ஒருமுறை நாங்கள் மன்றாடும் இடத்திற்கு போய்க் கொண்டிருக்கும்போது முன்னறிவிக்கும் தீய ஆவியை தனக்குள்ளே கொண்டிருந்த ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவள் குறிசொல்வதன் மூலமாக, தனது எஜமானர்களுக்குப் பெரும் இலாபத்தைப் பெற்றுக் கொடுத்தாள். 17அந்தப் பெண், பவுலையும் எங்களையும் விடாமல் பின்தொடர்ந்து வந்து, “இவர்கள் அதி உன்னதமான இறைவனின் ஊழியர்கள். இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். 18அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்து கொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் எரிச்சலடைந்து, அந்த ஆவியிடம், “இயேசு கிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளைவிட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்த ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது.
19அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிப்பதற்கான தங்களின் வாய்ப்பு இல்லாது போய் விட்டது என்பதை அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தை கூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக் கொண்டுவந்தார்கள். 20அவர்கள் இவர்களை மாவட்ட நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர்கள் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள். 21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
22அப்போது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். மாவட்ட நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள். 23அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்த பின் பவுலையும் சீலாவையும் சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள். 24இந்த கட்டளைகளைப் பெற்ற அந்தச் சிறைக்காவலன், பவுலையும் சீலாவையும் உட்சிறையில் போட்டு அவர்களுடைய கால்களை மர விலங்குகளில் மாட்டி வைத்தான்.
25ஏறக்குறைய நள்ளிரவு வேளை பவுலும் சீலாவும் மன்றாடிக் கொண்டும் இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தார்கள். சிறையிலிருந்த மற்றைய கைதிகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 26திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அத்திவாரங்கள் அசைந்தன. அப்போது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன. 27சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவி, தற்கொலை செய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். 28ஆனால் பவுலோ அவனை நோக்கிச் சத்தமிட்டு, “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கின்றோம்” என்றான்.
29அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச் செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக் கொண்டு பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தான். 30அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமார் அவர்களே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
31அதற்கு அவர்கள், “ஆண்டவர் இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். உன்னோடு உனது குடும்பத்தவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்றார்கள். 32பின்பு அவர்கள் அவனுக்கும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள். 33அந்த இரவு வேளையிலேயே, அந்தச் சிறைக்காவலன் அவர்களை அழைத்துக்கொண்டு போய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 34அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான். தானும் தன்னுடைய குடும்பத்தவர் அனைவரும் இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
35பொழுது விடிந்ததும் மாவட்ட நீதிபதிகள், “அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்ற உத்தரவுடன், தமது அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள். 36சிறைக்காவலன் பவுலிடம், “மாவட்ட நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீங்களும் சீலாவும் சமாதானத்துடன் வெளியே போகலாம்” என்றான்.
37ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்வித குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்போது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் பார்க்கின்றார்களா? முடியாது! அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்துக்கொண்டு போய் விடட்டும்” என்றான்.
38அந்த அதிகாரிகள் இதை மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள். 39எனவே மாவட்ட நீதிபதிகள் வந்து இவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து லீதியாளின் வீட்டிற்குப் போனார்கள். அங்கே அவர்கள் சகோதர சகோதரிகளைச் சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுப் போனார்கள்.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.