YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15

15
எருசலேமில் நியாயசபை
1சிலர் யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்து, “மோசே போதித்த முறைப்படி நீங்கள் விருத்தசேதனம் செய்யாவிட்டால் இரட்சிக்கப்பட முடியாது” என அங்கிருந்த சகோதரருக்குப் போதித்துக் கொண்டிருந்தார்கள். 2இதனால் அவர்களுக்கும், பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக் குறித்து அப்போஸ்தலர்களையும் மூப்பரையும் கலந்து பேசும்படி எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனே சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள். 3இப்படியாக திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கேயா வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் செய்யும்போது யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் திரும்பி இருக்கின்றார்கள் என்பதை அங்கிருந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தார்கள். இந்தச் செய்தி அவர்கள் எல்லோருக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. 4அவர்கள் எருசலேமைச் சென்றடைந்தபோது திருச்சபையினாலும் அப்போஸ்தலர்களினாலும் மூப்பர்களினாலும் வரவேற்கப்பட்டார்கள். பவுலும் பர்னபாவும் தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.
5அப்போது பரிசேயர்கள் பிரிவிலிருந்து விசுவாசிகளாய் ஆகியிருந்தவர்களில் சிலர் எழுந்து நின்று, “யூதரல்லாத மக்களும் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டு மோசேயின் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள்.
6அப்போது அப்போஸ்தலர்களும், மூப்பர்களும் இந்த விடயத்தைக் குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள். 7அதிக நேரம் கலந்துரையாடிய பின்பு, பேதுரு எழுந்து நின்று அவர்களிடம் பேசத் தொடங்கினான்: “சகோதரரே, இறைவன் உங்கள் மத்தியிலிருந்து சிறிது காலத்துக்கு முன்பு ஒரு தெரிவைச் செய்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். யூதரல்லாத மக்களும் என் உதடுகளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக அவர் என்னைத் தெரிவு செய்தார். 8இருதயத்தை அறிகிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்தது போல் யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார். 9இறைவன் அவர்களுடைய இருதயங்களையும் விசுவாசத்தினால் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் காட்டாதிருந்தார். 10இப்படியிருக்க, நம்மாலோ நம் முற்பிதாக்களாலோ சுமக்க முடியாத நுகத்தை, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின் மேல் சுமத்தி, இறைவனை ஏன் சோதிக்கிறீர்கள்? 11உண்மையில் நாங்களும் அவர்களைப் போலவே ஆண்டவராகிய இயேசுவின் கிருபையின் மூலமே இரட்சிக்கப்படுகின்றோம் என்றே விசுவாசிக்கின்றோம்” என்றான்.
12பின்பு பர்னபாவும் பவுலும் தங்கள் மூலமாக, யூதரல்லாத மக்கள் மத்தியில் இறைவன் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது கூடியிருந்த அனைவரும் மௌனமாய் இருந்தார்கள். 13அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு பேசத் தொடங்கினான்: “சகோதரரே, நான் சொல்வதைக் கேளுங்கள். 14எப்படியாக இறைவன் முதன்முறையாக யூதரல்லாத மக்களிலிருந்து தமது பெயருக்கென்று மக்களைத் தெரிவு செய்தார் என்பதை சீமோன்#15:14 சீமோன் – கிரேக்க மொழியில் சிமியோன் என்றுள்ளது. இது பேதுருவைக் குறிக்கின்றது நமக்கு விபரமாய் சொல்லியிருக்கின்றான். 15இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன, அதன்படி:
16“ ‘இதற்குப் பின்பு நான் திரும்பி வந்து,
விழுந்து போன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் கட்டுவேன்.
அதில் பாழடைந்து போனவற்றைக் கட்டுவேன்.
நான் அதைத் திரும்பவும் புதுப்பிப்பேன்.
17அப்போது மற்றைய#15:17 மற்றைய – எஞ்சியிருக்கும் என்றும் மொழிபெயர்க்கலாம் மக்கள் கர்த்தரைத் தேடுவார்கள்,
எனது பெயரை வைத்துக் கொண்டிருக்கிற யூதரல்லாத மக்கள் எல்லோரும் கர்த்தரைத்
தேடுவார்கள் என்று இவற்றைச் செய்கின்ற கர்த்தர் சொல்கின்றார்’
என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.#15:17 ஆமோ. 9:11,12
18‘இதையெல்லாம் அவர் வெகு காலத்திற்கு முன் ஆதியிலிருந்தே அறிந்து வைத்திருக்கிறார்.’#15:18 ஏசா. 45:21
19“எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகையில் நாம் அவர்களுக்கு அதிக சிரமங்களை அளிக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம். 20ஆயினும், அவர்கள் விக்கிரகங்களினால் கறைப்பட்ட உணவிலிருந்தும், பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் மற்றும் இரத்தம் சிந்தப்படாமல் நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும் தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். 21ஏனெனில் ஒவ்வொரு பட்டணத்திலும், முற்காலத்திலிருந்து மோசேயின் இந்த நீதிச்சட்டங்கள் பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும், ஜெபஆலயங்களில் அவை வாசிக்கப்படுகின்றனவே” என்றான்.
யூதரல்லாத விசுவாசிகளுக்கு கடிதம்
22பின்பு அப்போஸ்தலர்களும், மூப்பர்களும் திருச்சபையோர் எல்லோரும் தங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதற்காக அவர்கள் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்த பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்து கொண்டார்கள். 23அவர்களுடன் இவ்விதமாய் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்:
அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கின்ற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு,
உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் எழுதுவதாவது:
உங்களுக்கு வாழ்த்துதல்கள்.
24எமது அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், தாங்கள் சொன்ன காரியங்களினாலே அவர்கள் உங்களுக்கு மனக் குழப்பத்தை உண்டாக்கி உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கின்றார்கள் என்றும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். 25எனவே, நாங்கள் எல்லோரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும், பவுலுடனும் அனுப்புவதற்கு இணங்கியிருக்கிறோம். 26இவர்கள், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். 28கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள் மீது சுமத்தாமல் இருப்பது நலமென்று பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது. 29விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவிலிருந்தும், இரத்தத்தைச் சாப்பிடுவதிலிருந்தும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடுவதிலிருந்தும் மற்றும் பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உங்களை நீங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது.
உங்களுக்கு நலமுண்டாவதாக.
30எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு அந்தியோகியாவுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள். 31அந்த ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வாசித்து மக்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள். 32யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்தார்கள். எனவே அவர்கள் அந்த சகோதரர்களை ஊக்கப்படுத்துவதற்கும் தைரியப்படுத்துவதற்கும் பல காரியங்களைச் சொன்னார்கள். 33சிறிது காலம் அவர்கள் அங்கு தங்கியிருந்த பின் அங்கிருந்த சகோதரர்களது சமாதான ஆசீர்வாதத்துடன் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப் போனார்கள். 34#15:34 சில மூலபிரதிகளில் 34 ஆம் வசனம் காணப்படுவதில்லை.ஆனால் சீலாவோ, அங்கேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான். 35பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சிறிது காலம் தங்கியிருந்து அங்கே வேறு பலருடன் சேர்ந்து கர்த்தரின் வார்த்தையை போதித்துக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருந்தார்கள்.
பவுலும் பர்னபாவும்
36சிறிது காலத்தின் பின், பவுல் பர்னபாவிடம், “நாம் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கித்த எல்லாப் பட்டணங்களிலும் உள்ள சகோதரர்களிடம் திரும்பவும் போய் அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றான். 37பர்னபா, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினான். 38ஆனால் பவுலோ, மாற்கு பம்பிலியாவிலே ஊழியத்தின் இடைநடுவிலே தங்களை விட்டுவிட்டு தங்களுடன் வராமல் போனதால் அவனை அழைத்துக்கொண்டு போவது நல்லதல்ல என்று நினைத்தான். 39இது குறித்து அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து போனார்கள். பர்னபா, மாற்குவை அழைத்துக்கொண்டு கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குச் சென்றான். 40பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து, சகோதரர்களால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு புறப்பட்டுச் சென்றான். 41பவுல் சீரியா, சிலிசியா வழியாகப் போய் திருச்சபைகளைப் பலப்படுத்தினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in