YouVersion Logo
Search Icon

2 கொரி 4

4
மண்சாடியில் திரவியம்
1ஆகவே, இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை. 2நாங்கள் வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை ஏற்றுக்கொள்ளாமலும், ஏமாற்றுகின்றவர்களாய் இராமலும் இறைவனுடைய வார்த்தையை திரித்துக் கூறாமலும், சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக் கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைக் குறித்து நாங்கள் நற்சான்று கொடுக்கின்றவர்களாக இருக்கின்றோம். 3எங்களுடைய நற்செய்தி முகத்திரையால் மூடியதைப் போல் மறைவானதாயிருந்தால், அது அழிந்து போகின்றவர்களுக்கே மறைவானதாயிருக்கிறது. 4அவிசுவாசிகளாகிய அவர்களின் மனதை இவ்வுலகின் இறைவனாய் இருப்பவன் குருடாக்கியிருக்கிறான். அதனால் இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை அவர்களால் காண முடிவதில்லை. 5நாங்கள் எங்களை பிரசங்கியாமல், இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும், எங்களையோ இயேசுவின் பொருட்டு உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 6“இருளின்மீது வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”#4:6 ஆதி. 1:3 எனக் கூறிய இறைவனே கிறிஸ்துவின் முகத்திலே உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கின்றார்.
7ஆனாலும், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களுடையது அல்ல, இறைவனுடையது என்பதை அறியும்படி மட்பாண்டங்கள் போல் உடைந்து போகக்கூடிய நாங்கள் இந்தப் புதையலை பெற்றிருக்கிறோம். 8நாங்கள் அனைத்து பக்கத்திலும் நெருக்கப்பட்டும், நசுங்குண்டு போவதில்லை. குழப்பமடைந்தும், மனந்தளர்ந்து போவதில்லை. 9துன்புறுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை; வீழ்த்தப்பட்டும், அழிந்து போகவில்லை. 10இயேசுவின் வாழ்க்கை எங்கள் உடலில் வெளிப்படும்படி, நாங்கள் எப்போதும் இயேசுவின் மரணத்தை எங்கள் உடலில் சுமக்கிறோம். 11இதனால், மரணத்துக்குரிய எங்கள் உடலில் அவருடைய வாழ்வு வெளிப்படும்படி, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவின் பொருட்டு எப்போதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகின்றோம். 12இப்படியாகவே, மரணம் எங்களிலும் வாழ்வு உங்களிலும் செயலாற்றுகிறது.
13“நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்”#4:13 சங். 116:10 என்று எழுதியிருக்கின்றபடி, அதே விசுவாசத்தின் ஆவியினாலே நாங்களும் விசுவாசிக்கின்றோம். ஆதலால் பேசுகின்றோம். 14ஏனெனில் ஆண்டவர் இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன் எங்களையும் உயிரோடு எழுப்பி, தமது பிரசன்னத்தில் உங்களுடன் சேர்த்து நிறுத்துவார் என்பதை அறிந்திருக்கிறோம். 15இவையெல்லாம் உங்களுக்காகவே நடைபெறுகின்றன. அதன்மூலமாக, கிருபையை பெற்றுக்கொள்கின்றவர்கள் பெருகும்போது நன்றி செலுத்துதலும் பெருகும். அதனால் இறைவனுக்கே மகிமையுண்டாகும்.
16வெளிப்புறமாக நாம் உருவழிந்து போனாலும், எமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகின்றபடியால் நாங்கள் மனம் தளர்ந்து போவதில்லை. 17ஏனெனில் நமக்குத் தற்காலிகமாய் ஏற்படுகின்ற பாரமற்ற சிறிய துன்பங்களானது, அவற்றோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத பாரம் நிறைந்த நித்திய மகிமையை விளைவிக்கின்றன. 18எனவே நாங்கள் காணப்படுபவைகளை அல்ல, காணப்படாதவைகளையே நோக்கியிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.

Currently Selected:

2 கொரி 4: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in