YouVersion Logo
Search Icon

2 கொரி 3

3
1மறுபடியும் எங்களை நாங்களே பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சிலருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுவது போல, உங்களுக்கு கையளிப்பதற்கோ அல்லது உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கோ எங்களைக் குறித்த நற்சான்றுக் கடிதங்கள் அவசியமா? 2நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டு, எல்லோராலும் அறிந்து வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள். 3நீங்கள் எங்கள் ஊழியத்தின் விளைவாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒரு கடிதமாகக் காணப்படுகிறீர்கள். அது பேனா மையினால் அன்றி வாழும் இறைவனின் ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது, கற்பலகைகளில் அன்றி மனிதனின் இருதய பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.
4இதுவே உண்மையான நிலைமை என்பதை குறித்து கிறிஸ்துவின் மூலமாக எமக்கு இறைவனில் நம்பிக்கை உண்டு. 5நாங்கள், எங்களால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் அல்லர். எங்கள் செயற்திறன் இறைவனிடமிருந்தே வருகின்றது. 6அவர் எங்களை புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு அவசியமான திறன் உடையவர்கள் ஆக்கினார். அந்த புது உடன்படிக்கை, எழுத்துமூலம் எழுதி கொடுக்கப்பட்டதாக இராமல் ஆவிக்குரியதாயிருக்கிறது. முன்பு எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நீதிச்சட்டம் மரணத்தை அளிக்கிறது, ஆவியோ உயிரளிக்கிறது.
புது உடன்படிக்கையின் மகிமை
7கற்களின் மேல் பொறிக்கப்பட்ட எழுத்துக்களினாலானதும் மரணத்தைக் கொண்டுவந்ததுமான அந்த பழைய ஊழியமானது மகிமையுள்ளதாய், இஸ்ரயேலர்களால் மோசேயின் முகத்தை நேராகப் பார்க்கக்கூட முடியாத, பிரகாசத்துடன் வந்தது. இறுதியில் மறைந்து போன அந்த மகிமையே அப்படிப்பட்டது எனில், 8ஆவியானவரின் ஊழியம் அதைவிட அதிக மகிமையுள்ளதாய் இருக்கும் அல்லவா? 9மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் ஊழியம்கூட மகிமையுள்ளதாக இருக்குமானால், நீதியைக் கொண்டுவரும் ஊழியம் அதைவிட மகிமையுள்ளதாக இருக்கும்! 10உண்மையில், ஒரு காலத்தில் மகிமையுள்ளதாக இருந்ததானது, அதைவிட மகிமையானது வந்ததால் மகிமை அற்றதாகிப் போனது. 11இப்படியாக, மறைந்து போவதே மகிமையுடன் வந்தது என்றால், நிலையானது அதைவிட அதிக மகிமையுள்ளது அல்லவா!
12ஆகவே, இத்தகைய எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் துணிவுடன் காணப்படுகிறோம். 13மறைந்து போகும் மகிமையை இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின் மேல் முகத்திரை போட்டுக் கொண்டதுபோல நாங்கள் போடுவதில்லை. 14அவர்களது மனம் கடினப்பட்டிருந்தது. இன்றுவரை அந்த முகத்திரையானது அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது நீக்கப்படாமலேயே இருக்கின்றது. ஏனெனில் அது கிறிஸ்துவினால் மட்டுமே நீக்கப்படுகிறது. 15மோசேயின் நீதிச்சட்டங்கள் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களுடைய இருதயங்கள் இன்றுவரை முகத்திரை இடப்பட்டனவாகவே இருக்கின்றன. 16ஆனால் யாராயிருப்பினும் கர்த்தரிடத்தில் திரும்பும்போது அந்த முகத்திரை நீக்கப்படுகிறது. 17இப்போதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கோ அங்கே விடுதலை உண்டு. 18நாம் எல்லோரும் முகத்திரை இடப்படாத முகத்துடன் கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிப்பதோடு, மகிமையின் மேல் மகிமையடைந்து அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது ஆவியாயிருக்கின்ற கர்த்தரிடமிருந்தே வருகின்றது.

Currently Selected:

2 கொரி 3: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in