YouVersion Logo
Search Icon

1 தீமோத்தேயு 5

5
விதவைகள், மூப்பர்கள் மற்றும் அடிமைகள்
1வயதில் மூத்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்காதே, அவர்களை உன் தந்தையைப் போல் மதித்து வேண்டுகோள் விடு. வாலிபர்களை உனது சகோதரர்களைப் போல் நடத்தி, 2வயதில் மூத்த பெண்களைத் தாயாரைப் போலவும், இளம் பெண்களைச் சகோதரிகளைப் போலவும் எண்ணி தூய்மையாய் நடந்துகொள்.
3உண்மையாகவே தேவையோடு இருக்கும் விதவைகளுக்கு வேண்டிய ஆதரவைக் கொடு. 4ஆனால் எந்த விதவைக்காவது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தால், அவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதன் மூலமாக இறைபக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும். இப்படியாகத் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில் இதுவே இறைவனைப் பிரியப்படுத்தும் செயல். 5உண்மையாகவே ஆதரவு இன்றி தனித்து கைவிடப்பட்ட ஒரு விதவை, தனது எதிர்பார்ப்பை இறைவனிலே வைத்து இரவும் பகலும் மன்றாடி, அவரிடமே உதவியை நாடி நிற்பாள். 6ஆனால் உலகத்தின் இன்ப வாழ்வை விரும்புகின்ற விதவையோ, உயிரோடிருந்தாலும் நடைப்பிணமாகவே இருப்பாள். 7எவர் மீதும் குற்றம் சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. 8தன் உறவினர்களுக்கு, குறிப்பாக தனது குடும்பத்தவர்களுக்கு உதவி செய்யாத ஒருவன் தன்னுடைய விசுவாசத்தையே மறுதலிக்கின்றவனாகவும், விசுவாசமற்ற ஒருவனைவிட மோசமானவனாகவும் இருக்கின்றான்.
9விதவைகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள் அறுபது வயதிற்கு மேற்பட்டவராயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருக்க வேண்டும். 10அத்துடன் தனது நற்செயல்களினால், அதாவது பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கின்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லாவிதமான நற்செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தி நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும்.
11இந்தப் பட்டியலில் இளம் விதவைகளை பதிவுசெய்து கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட ஆசைகளால் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கப்படும்போது, மறுமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். 12இப்படியாக முதலில் கொடுத்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள். 13அதைவிட அவர்கள் சோம்பேறிகளாகி வீடுவீடாகத் திரிவதற்குப் பழகிக்கொள்வார்கள். சோம்பேறிகளாக மட்டுமல்ல, மற்றவர்களைக் குறித்து வீண் பேச்சு பேசுகின்றவர்களாகவும், மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகின்றவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித் திரிவார்கள். 14எனவே இளம் விதவைகளுக்கு நான் கொடுக்கும் ஆலோசனை, அவர்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்த வேண்டும். எதிரியானவன் அவமதித்துப் பேசுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. 15ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி, சாத்தானைப் பின்பற்றிச் சென்று விட்டார்கள்.
16விசுவாசியான ஒரு பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருப்பார்களானால், அவர்களை அப்பெண்ணே பராமரிக்க வேண்டும். அந்தப் பாரத்தை திருச்சபையின் மேல் சுமத்தக் கூடாது. அப்போதுதான் உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபையால் உதவி செய்ய முடியும்.
17திருச்சபையை நல்லவிதத்தில் நடத்துகின்ற மூப்பர்களை, விசேடமாக பிரசங்கம் பண்ணுவதிலும் போதிப்பதிலும் ஈடுபடும் மூப்பர்களை இரட்டிப்பான மதிப்பிற்குத்#5:17 இரட்டிப்பான மதிப்பிற்கு – அவர்களின் தேவைகளும்கூட சந்திக்கப்பட வேண்டும் என்பதுவும் இதன் பொருள். தகுதியானவர்களாக எண்ண வேண்டும். 18ஏனெனில், “தானியக் கதிரைக் கதிரடிக்கும் எருதின் வாயைக் கட்ட வேண்டாம்”#5:18 உபா. 25:4 என்றும், “வேலை செய்பவன் தன் கூலியைப் பெற உரிமையுள்ளவன்”#5:18 லூக். 10:7 என்றும் வேதவசனம் சொல்கின்றது. 19மூப்பர் ஒருவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்கள் இல்லாமல் ஏற்றுக்கொள்ளாதே. 20பாவம் செய்கின்ற மூப்பர்கள், எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள்ளப்பட வேண்டும். அப்போது அது மற்றவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தும்.#5:20 பயத்தை ஏற்படுத்தும் – எச்சரிப்பாய் இருக்கும் என்பது இதன் அர்த்தம்.
21இறைவனுக்கும், கிறிஸ்து இயேசுவுக்கும், தெரிவு செய்யப்பட்ட இறைதூதர்களுக்கும் முன்னிலையில் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: இந்த அறிவுறுத்தல்களைப் பாரபட்சமோ பக்கச்சார்போ இல்லாமல் கைக்கொள்.
22அவசரப்பட்டு எவர் மீதும் கைகளை வைத்து#5:22 கைகளை வைத்து – ஊழியத்தில் நியமிக்கப்படும் ஒருவர் மீது கைகளை வைத்து மன்றாடுவதை இது குறிக்கும். விடாதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மை உள்ளவனாய் காத்துக்கொள்.
23தொடர்ந்து தண்ணீரை மட்டும் குடிக்காமல் உனது வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படுகின்ற சுகவீனங்களுக்காகவும் கொஞ்சம் திராட்சை ரசத்தையும் அருந்து.
24சிலருடைய பாவங்கள் வெளிப்படையாய் தெரிவதால், அவை நியாயத்தீர்ப்பிற்கு முதலில் வந்து சேருகின்றன. மற்றவர்களுடைய பாவங்களோ பின்னரே தெரிய வரும். 25அதேபோல, நல்ல செயல்களும் வெளிப்படையாய் தெரிய வரும், அப்படி வெளிப்படாதவைகள் தொடர்ந்தும் மறைந்திருக்க மாட்டாது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for 1 தீமோத்தேயு 5