YouVersion Logo
Search Icon

1 தீமோத்தேயு 4

4
1பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு வஞ்சிக்கும் ஆவிகளையும் பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள். 2இப்படியான போதனைகள், வேடதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டு மரத்துப் போனவை. 3திருமணம் செய்யக் கூடாதென்றும், குறிப்பிட்ட சில வகை உணவை உண்ணக் கூடாதென்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் விசுவாசிக்கின்றவர்களும், சத்தியத்தை அறிந்தவர்களும் நன்றி சொல்லி உண்பதற்காகவே இறைவன் அவற்றைப் படைத்திருக்கிறார். 4ஏனெனில் இறைவன் படைத்த எல்லாம் நல்லவையே, நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டால் எதையும் ஒதுக்க வேண்டியதில்லை. 5ஏனென்றால், இறைவனுடைய வார்த்தையினாலும் மன்றாடுதலினாலும் அது பரிசுத்தமாக்கப்படுகிறது.
6இக்காரியங்களை சகோதர சகோதரிகளுக்கு அறியச் செய்தால் கிறிஸ்து இயேசுவின் நல்லதொரு ஊழியனாயிருப்பாய். விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நீ கைக்கொண்ட நல்ல போதனைகளிலும் ஊட்டம் பெற்றவனாக இருப்பாய். 7இறைபக்தியில்லாதவர்களின் கட்டுக்கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தம் கொள்ளாதே. அதற்குப் பதிலாக இறைபக்தியில் உன்னைப் பயிற்றுவித்துக் கொள். 8உடற்பயிற்சி ஓரளவு பயன் தரும். ஆனால் இறைபக்தி எல்லாவிதத்திலும் பயனுள்ளது. அது தற்கால வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் பயன் தரும் என்ற வாக்குறுதியைக் கொண்டுள்ளது.
9இது நம்பத்தகுந்ததும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமான கூற்று. 10இதற்காகவே நாம் கடினமாகப் பாடுபட்டு முயற்சி செய்கின்றோம். ஏனெனில் எல்லா மனிதர்களுக்கும், விசேடமாக விசுவாசிகளுக்கு இரட்சகராயிருக்கின்ற வாழும் இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம்.
11இந்தக் காரியங்களை நீ கட்டளையிட்டும், போதித்தும் கொண்டிரு. 12நீ வாலிபனாய் இருப்பதால், யாரும் உன்னைத் தாழ்வாக எண்ண இடம் கொடாதே. அத்துடன் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும் விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. 13நான் வரும் வரைக்கும் திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் கவனமாக ஈடுபட்டுக் கொண்டிரு. 14மூப்பர் குழுவினர் உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே.
15இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக் கொடு. அப்போது உன்னுடைய முன்னேற்றத்தை எல்லோரும் தெளிவாகக் கண்டுகொள்வார்கள். 16உன் வாழ்க்கை முறையைக் குறித்தும், உபதேசத்தைக் குறித்தும் அதிக கவனம் செலுத்து. அவைகளில் நிலைத்திரு, அப்படியிருந்தால் உன்னையும், நீ சொல்வதைக் கேட்கின்றவர்களையும் மீட்டுக்கொள்வாய்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 தீமோத்தேயு 4