1 பேதுரு 3
3
1மனைவிமாரே! அவ்வாறே நீங்களும் உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்போது அவர்களில் எவராவது வேதவசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவராக இருந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தைகூட பேச அவசியமில்லாமல் உங்கள் நடத்தையினால் அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கும். 2தூய்மையும், பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும். 3தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலை உயர்ந்த உடைகளை அணிதல் ஆகிய வெளி அலங்காரத்தில் உங்கள் அழகு தங்கியிருக்கக் கூடாது. 4உள்ளத்தின் அழகே, உங்களின் அழகாக இருக்க வேண்டும். சாந்தமும், அமைதியும் உள்ள ஆவியே, அழிந்து போகாத அழகைக் கொடுக்கின்றது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது. 5ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய் முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கணவரிடம் பணிவுடன் நடந்தார்கள். 6அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாக இருப்பீர்கள்.
7கணவன்மாரே! அதுபோலவே நீங்கள் உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துணர்வோடு, அக்கறையாக வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாகவும், இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கின்றவர்களாகவும் இருப்பதனால் அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாடுதல்களுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
நன்மை செய்து துன்பம் அனுபவித்தல்
8இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒரே மனதுடையோராக இருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதர அன்பு காட்டுகின்றவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மை உள்ளவர்களாய் இருங்கள். 9தீமைக்குப் பதிலாக தீமை செய்ய வேண்டாம். அவமதிக்கப்பட்டதற்குப் பதிலாக அவமதிக்க வேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.
10ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கின்றதாவது:
“வாழ்வை நேசித்து,
நல்ல நாட்களைக் காண விரும்புகிறவன் எவனோ,
அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி,
தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுக்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.
11அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்ய வேண்டும்.
சமாதானத்தைத் தேடி, அதை நாடிச் செல்ல வேண்டும்.
12ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மீது இருக்கின்றன.
அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாடுதலை கவனமாய் கேட்கின்றன.
ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கின்றவர்களுக்கு எதிராய் இருக்கின்றது.”#3:12 சங். 34:12-16
13நீங்கள் நன்மை செய்ய ஆவல் உள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வார்கள்? 14ஆனால் நீங்கள் நீதியானதை செய்வதனால் துன்பம் அனுபவிக்க நேரிட்டாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே “அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்;#3:14 ஏசா. 8:12 கலக்கமடையவும் வேண்டாம்.” 15ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்று அவரை கனம் பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கின்ற ஒவ்வொருவருக்கும், பதில் சொல்வதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள். ஆனால் தயவுடனும், மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்ல வேண்டும். 16நீங்கள் நல்ல மனசாட்சி உடையவர்களாயும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்துவுக்குள்ளான உங்களது நன்னடத்தையை இகழ்ந்து பேசுகின்றவர்கள் உங்களை அவதூறாகப் பேசியதற்காக வெட்கமடைவார்கள். 17தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது. 18ஏனெனில், கிறிஸ்து எல்லாப் பாவங்களுக்காகவும் ஒரே முறை மரணித்தார். உங்களை இறைவனிடம் கொண்டு செல்லும்படியாக, நீதிமானான அவர் நீதியற்றவர்களுக்காக மரணித்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிரோடு எழுப்பப்பட்டார். 19அதில் அவர் சென்று, சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். 20வெகு காலத்திற்கு முன்பு நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தபோதும் கீழ்ப்படியாதுபோன ஆவிகளே அவை. அந்தப் பேழையில் இருந்த சிலராகிய எட்டுப் பேர் மட்டுமே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள். 21அதேபோல அந்த நீரானது உங்களை இப்போது இரட்சிக்கின்றதான ஞானஸ்நானத்திற்கு ஒரு முன் அடையாளமாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானம் உடலில் அழுக்கை நீக்குவதற்காக அல்ல, மாறாக இறைவனைப் பற்றிக்கொள்கின்ற தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாக இருக்கின்றது. இந்த ஞானஸ்நானமே இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே உங்களை இரட்சிக்கின்றது. 22இயேசு கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலது பக்கத்தில் இருக்கின்றார். இறைதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.
Currently Selected:
1 பேதுரு 3: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.