YouVersion Logo
Search Icon

1 பேதுரு 2

2
1இப்படியிருக்க அனைத்துத் தீமைகளையும், ஏமாற்றும் சுபாவத்தையும், வெளிவேடத்தையும், பொறாமையையும், எல்லாவிதமான அவதூறுப் பேச்சுக்களையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். 2புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்போது அதன்மூலமாக உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள். 3ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள்.
உயிருள்ள கல்லும் தெரிவு செய்யப்பட்ட மக்களும்
4இயேசுவே மனிதரால் நிராகரிக்கப்பட்ட, ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற வாழ்கின்ற கட்டடக் கல். அவரிடமே நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். 5இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும் பரிசுத்த குருத்துவப் பிரிவாக உயிருள்ள கட்டடக் கற்களைப் போல ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள்.
6ஏனெனில்:
“பாருங்கள்! சீயோனிலே ஒரு கட்டடக் கல்லை வைக்கிறேன்.
அதுவே அனைத்தையும் இணைக்கின்ற, தேர்ந்தெடுக்கப்பட்டதும் விலைமதிப்பற்றதுமான பிரதான மூலைக் கல்.
அவரில் நம்பிக்கையாய் இருக்கின்றவன்
ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை”#2:6 ஏசா. 28:16
என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
7விசுவாசிக்கின்ற உங்களுக்கு அது பெருமதிப்பிற்கு உரியது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ,
“கட்டடம் கட்டுகின்றவர்களால்
நிராகரிக்கப்பட்ட கட்டடக் கல்லே மூலைக் கல் ஆயிற்று.”#2:7 சங். 118:22
8இது,
“மனிதர்களை இடறச் செய்து,
அவர்களை விழச் செய்கின்ற கற்பாறையாகவும் இருக்கின்றது.”#2:8 ஏசா. 8:14
அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததனாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.
9ஆனால் நீங்களோ, உங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் சிறப்பை அறிவிக்கும்படி தெரிவு செய்யப்பட்ட மக்களாகவும், இறை அரச குருத்துவப் பிரிவாகவும், பரிசுத்த இனமாகவும், இறைவனின் உரிமைச் சொத்தான சமூகமாகவும் இருக்கின்றீர்கள். 10முன்பு நீங்கள் மக்களாக இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்கள். முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெறாதிருந்தீர்கள், ஆனால் இப்பொழுதோ இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
இறைவனை அறியாதோர் மத்தியில் நன்னடத்தை உள்ளவர்களாக வாழ்தல்
11பிரியமான நண்பர்களே! இந்த உலகத்தில் அந்நியரும், பிறநாட்டவருமாய் இருக்கின்ற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்களுக்கெதிராகப்#2:11 உங்களுக்கெதிராக – கிரேக்க மொழியில் ஆத்துமாவுக்கெதிராக போரிடுகின்றன. 12வெளிப்படையான நன்னடத்தை உள்ளவர்களாக வாழுங்கள். அப்போது இறைவனை அறியாதவர்கள் உங்களை தீமை செய்கின்றவர்கள் என்று குற்றம் சாட்டினாலும், அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில் இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.
13மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற எல்லா அதிகாரங்களுக்கும் கர்த்தரின் பொருட்டு பணிந்து நடவுங்கள். மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, 14அல்லது தீமை செய்கின்றவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கின்றவர்களைப் பாராட்டவும், அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். 15ஏனெனில் நன்மை செய்வதன் மூலமாக நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்க வேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கின்றது. 16சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள், ஆனால் அந்த சுதந்திரத்தை உங்கள் தீய வாழ்க்கைக்கு ஒரு மூடுதிரையாக பயன்படுத்தாதீர்கள். மாறாக இறைவனுக்கு பணி புரியும் அடிமைகளாக வாழுங்கள். 17அனைவருக்கும் உரிய மதிப்பு கொடுங்கள், விசுவாச குடும்பத்தாருடன் அன்பாய் இருங்கள், இறைவனுக்குப் பயந்திருங்கள், அரசனை மதித்து வாழுங்கள்.
18அடிமைகளே! உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மட்டுமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள். 19ஏனெனில் இறைவனை மனதில்கொண்டு, ஒருவர் தனக்கு அநீதியாக இழைக்கப்படும் வேதனையை சகிப்பாரானால் அது பாராட்டுக்குரியது. 20ஆனால் நீங்கள் செய்த தவறுக்காக தண்டிக்கப்படுகின்றபோது அதைச் சகித்துக்கொண்டால் உங்களை பாராட்ட முடியுமா? மாறாக, நன்மை செய்து அதன் காரணமாக வேதனை அனுபவிக்கின்றபோது நீங்கள் அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியது. 21இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்க வேண்டும் என்பதற்காக, கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகளை அனுபவித்து உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார்.
22“அவர் ஒரு பாவமும் செய்யவில்லை.
அவருடைய வாயில் வஞ்சனை எதுவும் காணப்பட்டதுமில்லை.”#2:22 ஏசா. 53:9
23அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும் அவர் பழிவாங்கவில்லை. அவர் வேதனைகளை அனுபவித்தபோது அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கின்ற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். 24நாம் பாவங்களுக்கு மரணித்தவர்களாக இனிமேல் நீதியின் வழியில் வாழ்வதற்காக அவர் தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின் மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள்.” 25ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப் போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.”#2:25 ஏசா. 53:4,5,6 ஆனால் இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், பாதுகாவலருமாய் இருக்கின்ற கிறிஸ்துவிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

Currently Selected:

1 பேதுரு 2: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in