YouVersion Logo
Search Icon

1 யோவான் 5

5
இறைவனுடைய மகனில் விசுவாசம்
1இயேசுவே மனிதனாக வந்த கிறிஸ்து என்று விசுவாசிக்கின்ற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கின்ற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான். 2இறைவனில் நாம் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் இருந்தே இறைவனுடைய பிள்ளைகளில் நாம் அன்பு கொண்டிருப்பதை அறிந்துகொள்ள முடியும். 3இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவரிடத்தில் அன்பாயிருப்பதாகும், அவருடைய கட்டளைகள் சுமையானவை அல்ல. 4இறைவனால் பிறந்த அனைவரும் உலகத்தை வெற்றிகொள்வார்கள். நமது விசுவாசமே உலகத்தை வெற்றிகொள்ளும். 5இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கின்றவர்களே அல்லாமல் உலகத்தை வெற்றிகொள்கின்றவர்கள் யாராக இருக்க முடியும்?
6இயேசு கிறிஸ்துவே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். தண்ணீரினால் மட்டுமல்ல, அவர் தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். இதைக் குறித்து ஆவியானவரும் சாட்சி கொடுக்கின்றார். ஏனெனில், ஆவியானவர் உண்மையுள்ளவர். 7ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று: 8ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும் ஒருமைப்பட்டிருக்கின்றன. 9நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கின்றோமே, அப்படியானால் இறைவனே தமது மகனைக் குறித்து சாட்சி கொடுக்கின்றபடியால், இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! 10இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கின்றவர்கள் இந்த சாட்சியை ஏற்றுக்கொள்கின்றார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனைப் பொய்யராக்கி இருக்கின்றார்கள். ஏனெனில் இறைவன் தமது மகனைக் குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. 11இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கின்றது என்பதே அந்தச் சாட்சி. 12இறைவனுடைய மகனைக் கொண்டிருப்பவர்கள் வாழ்வு பெற்றவர்கள். இறைவனுடைய மகனைக் கொண்டிராதவர்கள் வாழ்வு இல்லாதவர்கள்.
கடைசிக் குறிப்பு
13இறைவனுடைய மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கின்றவர்களே! நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கின்றீர்கள் என்று அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். 14நாம் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாடுதலைக் கேட்கின்றார் என்பதே இறைவனுக்கு முன்பாக நமக்குள்ள மனவுறுதியாய் இருக்கின்றது. 15நாம் எதைக் கேட்டாலும் அவர் காதுகொடுத்து கேட்கின்றார் என்பதை நாம் அறிந்திருந்தால், நாம் கேட்டதை பெற்றுக்கொள்கின்றோம் என்றும் அறிந்திருக்கிறோம்.
16மரணத்துக்கு இட்டுச் செல்லாத ஒரு பாவத்தை சக விசுவாசியொருவர் செய்வதை ஒருவர் கண்டு, அவருக்காக இவர் மன்றாடினால் இறைவன் அவருக்கு வாழ்வைக் கொடுப்பார். இது மரணத்துக்கு இட்டுச் செல்லாத பாவத்தைச் செய்தவருக்கேயாகும். மரணத்துக்கு இட்டுச் செல்லும் பாவமும் உண்டு. அதற்காக நீங்கள் மன்றாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 17எல்லா அநீதியும் பாவமே. ஆனாலும் மரணத்துக்கு இட்டுச் செல்லாத பாவமும் உண்டு.
18இறைவனால் பிறந்த யாரும் பாவத்தில் நிலைத்திருப்பதில்லை என்று நாம் அறிவோம். ஏனெனில் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர், அவர்களை காக்கிறார். தீயவனால் அவர்களைத் தொட முடியாது. 19நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்றும், நம்மைச் சுற்றியிருக்கின்ற முழு உலகமும் தீயவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். 20நாம் மெய்யானவரை அறிந்துகொள்ளும்படி, இறைவனுடைய மகனின் வருகை நமக்கு புரிந்துணர்வைக் கொடுத்திருக்கிறது. அதனால், மெய்யானவரை அறிந்து மெய்யானவருக்குள் இருக்கின்றோம்.#5:20 மெய்யானவருக்குள் இருக்கின்றோம் – இயேசு கிறிஸ்துவில் இருக்கின்றோம் என்று பொருள். இவரே மெய்யான இறைவனும், நித்திய வாழ்வுமாய் இருக்கின்றார்.
21அன்பான பிள்ளைகளே, விக்கிரகங்களிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.

Currently Selected:

1 யோவான் 5: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in