YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 51

51
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.
1தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
என் பாவங்களை அழித்துவிடும்.
2தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
என் பாவங்களைக் கழுவிவிடும்.
என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
3நான் பாவம் செய்தேனென அறிவேன்.
அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
4நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
உமது முடிவுகள் நியாயமானவை.
5நான் பாவத்தில் பிறந்தேன்.
என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
6தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
7ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
8என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
9எனது பாவங்களைப் பாராதேயும்!
அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11என்னைத் தூரத் தள்ளாதேயும்!
என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16நீர் பலிகளை விரும்பவில்லை.
நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in