மத்தேயு எழுதிய சுவிசேஷம் 18
18
இயேசு யார் பெரியவர் என்பது பற்றிச் சொல்லுதல்
(மாற்கு 9:33-37; லூக்கா 9:46-48)
1அச்சமயத்தில் இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “பரலோக இராஜ்யத்தில் யார் மிகப் பெரியவர்?” என்று கேட்டனர்.
2இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மருகில் அழைத்து, தம் சீஷர்கள் முன் நிறுத்தினார். 3பின் அவர்களிடம் கூறினார், “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். நீங்கள் மனந்திரும்பி உள்ளத்தில் சிறு பிள்ளைகளைப் போல ஆக வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால், நீங்கள் ஒருபொழுதும் பரலோக இராஜ்யத்தில் நுழைய முடியாது. 4இந்த சிறு பிள்ளையைப்போல பணிவுள்ளவனாகிறவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவன்.
5“இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன், என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்
(மாற்கு 9:42-48; லூக்கா 17:1-2)
6“என்னிடம், நம்பிக்கை வைத்துள்ள ஒரு சிறு பிள்ளையைப் பாவம் செய்ய ஒருவன் தூண்டினால், அவனுக்கு மிகத் தீமை விளையும். அவ்வாறு செய்கிறவன், ஒரு ஆட்டுக்கல்லைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு கடலில் மூழ்குவதே நல்லது. 7பாவம் செய்ய மக்கள் சோதிக்கப்படுவதால், அவர்களுக்காக வருந்துகிறேன். அவ்வாறான செயல்கள் நடக்கவேண்டும்தான். ஆனால், அவற்றுக்குக் காரணமானவர்களுக்கு மிகுந்த தீங்கு வரும்.
8“உங்களது கையோ அல்லது காலோ உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறியுங்கள். சரீரத்தின் ஒரு பகுதியை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரு கை கால்களுடன் எரிகின்ற நரகத்தின் தீயில் என்றென்றைக்குமாக எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது. 9உங்களது கண் உங்களைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைப் பிடுங்கி எறியுங்கள். ஒரு கண்ணை இழந்து நித்திய ஜீவனை அடைவது உங்களுக்கு நல்லது. இரண்டு கண்களுடன் நரகத்தின் தீயில் எறியப்படுவதைக் காட்டிலும் அது நல்லது.
காணாமல் போன ஆட்டைப்பற்றிய உவமை
(லூக்கா 15:3-7)
10“எச்சரிக்கையாயிருங்கள். இச்சிறு பிள்ளைகள் மதிப்பற்றவர்கள் என்று எண்ணாதீர்கள். இவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப் பெற்றுள்ளார்கள் என்று நான் சொல்லுகிறேன். மேலும் அத்தூதர்கள் எப்பொழுதும் பரலோகத்தில் என் பிதாவானவருடன் இருக்கிறார்கள். 11#18:11 சில கிரேக்க பிரதிகளில் 11வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “மனுஷகுமாரன் தப்பிப்போன ஜனங்களை மீட்பதற்காக வந்தார்.”
12“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா? 13காணாமல் போன ஆட்டை அவன் கண்டுபிடித்தால், காணமல் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் காட்டிலும் அதனால் மிக மகிழ்ச்சியடைவான். 14அதைப்போலவே, பரலோகத்தில் இருக்கும் என் பிதா இப்பிள்ளைகள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன்.
ஒரு மனிதன் தவறு செய்தால்
(லூக்கா 17:3)
15“உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியோ உங்களுக்கு ஏதாவது தீமை செய்தால், அவர் செய்த தீமையை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதைத் தனிமையில் அவனிடம் சொல்லுங்கள். அதை அவர் கவனமாகக் கேட்பாரானால், அவர் மீண்டும் உங்கள் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்க நீங்கள் உதவி செய்தவர்களாவீர்கள். 16ஆனால் நீங்கள் கூறுவதைக் கேட்க அவர் மறுத்தால், மீண்டும் இரண்டு மூன்று பேருடன் சென்று நடந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள். அப்பொழுது, நடந்ததை உறுதிசெய்ய இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். 17அப்பொழுதும் அவன் கேட்க மறுத்தால், சபையாரிடம் சொல்லுங்கள். சபையார் சொல்வதையும் கேட்காமற் போனால், தேவ நம்பிக்கையற்றவனைப்போல் அவனை நடத்துங்கள். வரி வசூல் செய்பவனைப்போல் நடத்துங்கள்.
18“நான் உன்மையைச் சொல்லுகிறேன். நீங்கள் இவ்வுலகில் நியாயத்தைப் பேசும்பொழுது, அது தேவனின் நியாயமாக இருக்கும். இவ்வுலகில் நீங்கள் மன்னிப்பளித்தால் அது தேவனின் மன்னிப்பாக இருக்கும். 19மேலும், நான் சொல்லுகிறேன். உங்களில் இருவர் இவ்வுலகில் எதைக் குறித்தேனும் ஒரே மனமுடையவர்களாயிருந்தால் அதற்காக நீங்கள் பிரார்த்திக்கலாம். நீங்கள் கேட்பது பரலோகத்தில் உள்ள எனது பிதாவால் நிறைவேற்றப்படும். 20இது உண்மை. ஏனென்றால், இரண்டு மூன்று பேர் என்னில் விசுவாசம் வைத்துக் கூடினால் அவ்விடத்தில் நான் இருப்பேன்.”
மன்னிப்பைப்பற்றிய உவமை
21அப்பொழுது, பேதுரு இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரன் எனக்குத் தொடர்ந்து தீமை செய்தால் நான் அவனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா?” என்று கேட்டான்.
22அதற்கு இயேசு அவனுக்கு, “நீ அவனை ஏழு முறைக்கும் அதிகமாக மன்னிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அவன் எழுபத்தேழு முறை#18:22 எழுபத்தேழு முறை அல்லது ஏழு எழுபது முறைகள் பார்க்க. தீமை செய்தாலும் நீ தொடர்ந்து மன்னிக்க வேண்டும்” என்று பதில் அளித்தார்.
23“எனவே, பரலோகமானது தன் வேலைக்காரர்களுடன் கணக்கை சரி செய்ய முடிவெடுத்த மன்னனைப் போன்றது. 24மன்னன் வேலைக்காரர்களின் கணக்கை சரி செய்யத் துவங்கினான். ஒரு வேலைக்காரன் அம்மன்னனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. 25ஆனால், அவ்வேலைக்காரனால், தன் எஜமானனான மன்னனுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை. எனவே, அவ்வேலைக்காரனுக்குச் சொந்தமான அனைத்தையும் மனைவி குழந்தைகள் உட்பட ஏலம் போட மன்னன் ஆணையிட்டான். அதிலிருந்து தனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டும் என்றான்.
26“ஆனால், அந்த வேலைக்காரன் மன்னனின் கால்களில் விழுந்து, ‘என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தர வேண்டிய அனைத்தையும் நான் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சினான். 27மன்னன் அவ்வேலைக்காரனுக்காக வருந்தினான். எனவே, மன்னன் அவ்வேலைக்காரன் பணம் ஏதும் தரத் தேவையில்லை என கூறி அவ்வேலைக்காரனை விடுவித்தான்.
28“பின்னர், அதே வேலைக்காரன் தனக்குச் சிறிதளவே பணம் தரவேண்டிய வேறொரு வேலைக்காரனைக் கண்டான். அவன் உடனே, தனக்குப் பாக்கிப்பணம் தரவேண்டியவனின் கழுத்தைப் பிடித்து, ‘எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடு’ என்று கேட்டான்.
29“மற்றவன் அவன் கால்களில் வீழ்ந்து, ‘என்னைப் பொறுத்துக் கொள். உனக்குத் தரவேண்டிய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன்’ என்று கெஞ்சிக் கேட்டான்.
30“ஆனால், முதலாமவன் தான் பொறுத்துக்கொள்ள இயலாதென்றான். அவன் நீதிபதியிடம் மற்றவன் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூற இரண்டாமவன் சிறையில் அடைக்கப்பட்டான். அவ்வேலைக்காரன் அவன் தரவேண்டிய பணம் முழுவதையும் கொடுக்கும் வரையிலும் சிறையிலிருக்க நீதிபதி பணித்தார். 31மற்ற வேலைக்காரர்கள் அனைவரும் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். எனவே, அவர்கள் தங்கள் எஜமானனாகிய மன்னனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்கள்.
32“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன். 33ஆகவே, நீயும் உன் சக வேலைக்காரனுக்கு அதேபோலக் கருணை காட்டியிருக்க வேண்டும்’ என்று சொன்னான். 34மிகக் கோபமடைந்த மன்னன், அவ்வேலைக்காரனைச் சிறையிலிட்டான். தரவேண்டிய பணம் அனைத்தையும் திருப்பித் தரும்வரைக்கும் அவன் சிறையிலிருக்க வேண்டியிருந்தது.
35“என் பரலோகப் பிதா உங்களுக்கு என்ன செய்வாரோ அதையே அம்மன்னனும் செய்தான். நீங்கள் மெய்யாகவே உங்கள் சகோதரனையோ சகோதரியையோ மன்னிக்க வேண்டும். இல்லையெனில் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிக்கமாட்டார்” என்று இயேசு சொன்னார்.
Currently Selected:
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 18: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International